ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உட்பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதல் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் கடுமையாக பதிலடி கொடுத்தது.
இந்திய விமானங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அந்நாட்டு ராணுவ தளங்களை கூட விட்டுவைக்காமல் தாக்கியது. இந்தியாவின் இந்த நடவடிக்கையும்போது துருக்கி பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆயுதங்கள், ட்ரோன்களை கொடுத்து உதவியது. அதேபோல பாகிஸ்தானுக்கும் பகிரங்க ஆதரவு கொடுத்து இந்தியாவை விமர்சித்தது.
இதனைத் தொடர்ந்து இந்தியாவின் 9 விமான நிலையங்களில் தரைவழிச் சேவை பணியில் ஈடுபட்டிருந்த துருக்கியைச் சேர்ந்த 'செலெபி ஏவியேஷன்' Çelebi Aviation நிறுவனத்தின் செயல்பாடுகளை கடந்த ஆண்டு இந்திய அரசு ரத்து செய்தது. இதனை எதிர்த்து அந்த நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்ற நிலையில், பாதுகாப்பு காரணங்களால் இந்திய அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய அரசின் இந்த நடவடிக்கையால் செலெபி ஏவியேஷன் நிறுவனத்துக்கு 500 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 4,300 கோடி இழப்பைச் சந்தித்துள்ளதாக அதன் தலைவர் கனன் செலபியோக்லு (Canan Çelebioğlu) கூறியுள்ளார். அதோடு இந்த சம்பவத்தை தொடர்ந்து துருக்கியின் பல்வேறு நிறுவனங்களுடான இந்திய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன.
இது துருக்கியின் பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக மதிப்பிடப்படும் நிலையில், சமீபத்திய காலமாக பாகிஸ்தானுக்கான துருக்கியின் ஏற்றுமதி குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.