donald trump reuters
உலகம்

அமெரிக்காவுக்கு No சொல்லும் இந்தியர்கள்? மாறும் மாணவர்களின் தேர்வு! காரணம் என்ன?

அமெரிக்கா சென்று பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு, ட்ரம்பின் செயல்பாடுகளும் சட்ட நெருக்கடியுமே காரணமாக சொல்லப்படுகிறது. அமெரிக்கச்செல்லும் மாணவர்களின் எண்னிக்கை குறைய என்ன காரணம்? பார்க்கலாம்..

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார். ர

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பயிலும் மாணவர்களின் முதல் தேர்வுகளில் ஒன்றாக அமெரிக்கா இருந்து வருகிறது. மேம்பட்ட கல்வி மற்றும் பட்டப்படிப்புக்குப் பிறகு அங்கேயே வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் காரணமாக ஏராளமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவைத் தேர்வு செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயில அமெரிக்கா செல்லும் நிலையில், தற்போது அவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

MBBS Students

சர்வதேச கல்வி நிறுவனமான Institute of International Education வெளியிட்டுள்ள Open Doors 2026 அறிக்கையின்படி, 2025-26 கல்வியாண்டில் அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 6.5 சதவீதம் குறைந்து 3 லட்சத்து 39 ஆயிரத்து 435 ஆகச் சரிந்துள்ளது. முந்தைய கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 63 ஆயிரத்து 19 ஆக இருந்தது. குறிப்பாக, முதுநிலைப் படிப்புகளில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 34 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்து 1 லட்சத்து 16 ஆயிரத்து 609 ஆக உள்ளது. அதேபோல், இளங்கலைப் படிப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் சுமார் 1 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், படிப்பை முடித்த பிறகு அமெரிக்காவில் வேலைப் பயிற்சி பெற உதவும் Optional Practical Training எனப்படும் OPT திட்டத்தில் பங்கேற்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கியக் காரணமாக ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் விசா நடைமுறைகளில் கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, வெளிநாட்டு மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருப்பதுடன், விசா நேர்காணல் நடைமுறைகள் மற்றும் விண்ணப்பப் பரிசீலனையில் ஏற்படும் தாமதங்களும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுதவிர, அமெரிக்காவில் கல்வி பயில்வதற்கான செலவுகளும் மாணவர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளன. இதனால், அமெரிக்காவில் ஒட்டுமொத்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையும் 2025-26 கல்வியாண்டில் சுமார் 3 சதவீதம் குறைந்துள்ளது.

america

இதற்கிடையே, ட்ரம்ப் நிர்வாகத்தின் விசா கொள்கைகளுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களிலும் சட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் அமெரிக்காவில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் விசா காலத்தை நிர்ணயிப்பது தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த புதிய கொள்கையை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க பெடரல் நீதிமன்றம், குறிப்பிட்ட விசா காலக் கட்டுப்பாட்டு நடவடிக்கையைச் சட்டவிரோதமானது எனக் கூறி ரத்து செய்துள்ளது. இவ்வாறு ட்ரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கைகள் தொடர்ந்து விவாதத்தையும் சட்டச் சவால்களையும் சந்தித்து வரும் நிலையில், அமெரிக்காவில் கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்குமா அல்லது மாற்று நாடுகளே அவர்களின் விருப்பத் தேர்வாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.