Nithya Raman Reuters
உலகம்

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயரான இந்திய வம்சாவளி பெண்! யார் இந்த நித்யா ராமன்?

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முதல் இந்திய அமெரிக்க மேயராக நித்யா ராமன் தேர்வு!

PT WEB

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முதல் இந்திய அமெரிக்க மற்றும் தெற்காசிய வம்சாவளி மேயராக நித்யா ராமன் தேர்வாகியுள்ளார். 52.70% வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற அவர், வீடற்ற மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் முயற்சிகளால் மக்கள் ஆதரவை பெற்றார்.

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கெனவே மேயராக இருந்த கரென் பாஸை (Karen Bass) தோற்கடித்து, இந்தப் பொறுப்புக்கு தேர்வாகியுள்ளார். இதன் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முதல் இந்திய அமெரிக்க மேயர் மற்றும் முதல் தெற்காசிய வம்சாவளி மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

Nithya Raman

தேர்தலில் நித்யா ராமன் 52.70 சதவீத வாக்குகளையும், கரென் பாஸ் 47.30 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஜனநாயக சோசலிஸ்டுகள் அமைப்பின் ஆதரவுடன் நித்யா ராமன் இந்தத் தேர்தலில் களமிறங்கியிருந்தார்.

1981ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்தவர் நித்யா ராமன். திருவனந்தபுரத்தில் தனது குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியைக் கழித்த அவர், தனது 6 வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்குச் சென்றார். அவரது தந்தை வெங்கடராமன் கெல்ட்ரானிலும், தாயார் சுதா கெச்சேரி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த நித்யா, டெல்லிக்குத் திரும்பி குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகப் பணியாற்றினார். குறிப்பாக, காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்னதாக குடிசைப் பகுதிகளில் வசித்த மக்கள் வெளியேற்றப்படும் அபாயத்தை எதிர்கொள்ள உதவினார்.

Nithya Raman

2010ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் 'டிரான்ஸ்பரன்ட் சென்னை' என்ற அமைப்பைத் தொடங்கி, ஏழை மக்களின் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகளை ஆவணப்படுத்தினார்.

பின்னர் அமெரிக்கா திரும்பிய அவர், லாஸ் ஏஞ்சல்ஸில் வீடற்ற மக்களின் பிரச்சினைகளுக்காகவும் பணியாற்றினார். வீட்டு வாடகையைக் குறைப்பது, வீடற்ற மக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது, நகரின் அடிப்படைச் சேவைகளைச் சீரமைப்பது ஆகியவற்றை முன்வைத்து தேர்தலைச் சந்தித்த நித்யா ராமனின் வெற்றி தற்போது கவனம் பெற்றுள்ளது.