பெண் பிரதமர் வேட்பாளர் தல்லா முகநூல்
உலகம்

ட்ரம்ப்பின் லேடி வெர்ஷனா? கனடா பெண் பிரதமர் வேட்பாளர் ரூபி தல்லா காணொளிக்கு நெட்டிசன்கள் விமர்சனம்!

தல்லா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ள கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும், ‘இவர் என்ன கனடனாவில் பெண் டொனால்டு ட்ரம்ப்பா?’ என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ள இந்திய வம்சாவளியான ரூபி தல்லா, “நான் கனடா பிரதமரானால் நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும் 5 லட்சம் மக்களை நாட்டை விட்டு வெளியேற்றுவேன்” என்று வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் பலரும், ‘இவரென்ன கனடாவின் பெண் ட்ரம்ப்பா?’ என்று தங்களது கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

கனடா நாட்டின் பிரதமர் பதவிக்கான போட்டியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி. ரூபி தல்லா களமிறங்கி உள்ளார். லிபரெல் கட்சியை சேர்ந்த இவர் பிரதமராக தேர்வாகும் பட்சத்தில், கனடா நாட்டின் பிரதமராக பதவியேற்கும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை பெறுவார்.

ரூபி தல்லா

இந்நிலையில்தான் இவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் சட்டவிரோத குடிகள் பற்றி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் .

அந்தப் பதிவில், “நான் கனடா பிரதமரானால், நாட்டில் சட்ட விரோதமாக வசிக்கும் 5 லட்சம் பேரை நாட்டை விட்டே வெளியேற்றுவேன். இது உங்களுக்கு நான் கொடுக்கும் சத்தியம்” என்றுள்ளார் அவர்.

மேலும் அந்த காணொளியில், “கனடாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. புலம்பெயர்ந்த பெற்றோரின் ஒரு மகளாக நான் ஒன்றை சொல்லி கொள்கிறேன். புலம்பெயர்ந்தோர் நம் நாட்டை மகத்தானதாக கட்டியெழுப்ப உதவியிருப்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் மனிதர்கள் கடத்தி வரப்படுவதை நாம் தடுக்க வேண்டும். இது சட்டவிரோதமானது. உங்களின் பிரதமராக நான் ஆகும்பட்சத்தில், உங்களுக்கு ஒன்றை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். அதாவது, கனடாவில் சட்டவிரோதமாக வசிக்கும் ஒவ்வொருவரையும் நான் நாடு கடத்துவேன். இப்போது தொடங்கி கனடா மீண்டு வருகிறது'' என்று பேசியுள்ளார்.

இவரின் இந்த பதிவுக்கு கீழ் பலரும், ‘இவர் என்ன கனடனாவில் பெண் டொனால்டு ட்ரம்பா?’ என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

காரணம், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப், தான் வெற்றி பெற்றதை தொடர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை நாடு கடத்த தேவையான உத்தரவை பிறப்பித்தார். அதற்கான பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான், கனடா பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் தல்லாவும் இப்படி பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

யார் இந்த ரூபி தல்லா? 

Ruby Dhalla

50 வயதான ரூபி தல்லா, இந்தியாவின் பஞ்சாபை பூர்வீகமாக கொண்டவர். மருத்துவராக முதலில் பணிபுரிந்து வந்த தல்லா, 1993இல் கனடாவில் நடைபெற்ற அழகிப்போட்டியில், இரண்டாம் இடம் பிடித்தார். மேலும், கனடாவில் படமாக்கப்பட்ட கியோன் கிஸ் லியே என்ற பாலிவுட் திரைப்படத்திலும் நடித்துள்ள தல்லா, தனது 21ஆவது வயதில் அரசியலுக்கு வந்துள்ளார்.

இவர், தனது 10 வயதில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு, ஆப்பரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார். அதற்கு தனிப்பட்ட முறையில் இந்திரா காந்தி அவருக்கு பதிலளித்ததாக கூறப்படுகிறது.