அமெரிக்கா விபத்து எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்கா | இந்தியாவைச் சேர்ந்த தந்தை, மகள் சுட்டுக் கொலை!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது 24 வயது மகள் கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் மரணமும், இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் கடந்த ஆண்டில் மட்டும் தொடர் கதையாக இருந்தது. பின்னர், கடந்த சில மாதங்களாக இது குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. தற்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது 24 வயது மகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கரோலினாவில் 36 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மைனாங்க் படேல், பல்பொருள் அங்காடி வளாகத்தில் நடந்த ஒரு கொள்ளையின்போது சுட்டுக் கொல்லப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது.

ஊர்மி, பிரதீப் குமார்

அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள அக்கோமாக் கவுண்டியில், கடந்த மார்ச் 20ஆம் தேதி காலை 5:30 மணிக்கு லான்க்போர்டு நெடுஞ்சாலையில் உள்ள கடையில் பிரதீப் குமார் படேல் (56) என்பவர் அவரது மகள் ஊர்மியுடன் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மதுபானம் வாங்குவதற்காகக் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், ’இரவில் கடை ஏன் மூடப்பட்டிருந்தது’ என்று அவர்களிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் தந்தை-மகள் இருவரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் பிரதீப் படேல் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மகள் ஊர்மி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய 44 வயது ஜார்ஜ் பிரேசியர் டெவோன் வார்டன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த துயரமான செய்தி அமெரிக்கா முழுவதும் உள்ள இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஜார்ஜ் பிரேசியர் டெவோன் வார்டன், ஊர்மி, பிரதீப் குமார்

பிரதீப் படேல், அவரது மனைவி ஹன்சபென் மற்றும் அவர்களது மகள் ஊர்மி ஆகியோர் குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் உறவினர் பரேஷ் படேலுக்குச் சொந்தமான ஒரு பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வந்தனர். இதுதொடர்பாக பரேஷ் படேல், ”பாதிக்கப்பட்ட இருவரும் தனது குடும்ப உறுப்பினர்கள். இருவரும் வேலை செய்து கொண்டிருந்தனர். யாரோ ஒருவர் இங்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. பிரதீப் படேலுக்கும் ஹன்சபெனுக்கும் இன்னும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் கனடாவிலும், மற்றவர் அகமதாபாத்திலும் வசிக்கின்றனர்” என அவர் தெரிவித்தார்.