அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம்: இந்திய நடனக் கலைஞர் சுட்டுக்கொலை.. தூதரகத்துக்கு நடிகை வேண்டுகோள்!

அமெரிக்காவில் கொல்கத்தாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார்.
அமர்நாத் கோஷ்
அமர்நாத் கோஷ்ட்விட்டர்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரின் உயிரிழப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் மேலும் ஓர் உயிரிழப்பு சமீபத்தில் அரங்கேறி உள்ளது.

இந்தியாவின் கொல்கத்தாவைச் சேர்ந்த அமர்நாத் கோஷ், குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியம் ஆகிய கலைகளில் தேர்ந்தவர். இவர், சென்னையில் உள்ள கலாக்ஷேத்ரா அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். அமெரிக்காவில் கோஷ் செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நடனத்தில் MFA படித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் பகுதி அகாடமியருகே கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி மாலை நேர நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அவரை பலமுறை தாக்க முற்பட்டு உள்ளார். இதில், துப்பாக்கியால் சுடப்பட்ட கோஷ் படுகாயமடைந்து உயிரிழந்து உள்ளார். அவருடைய பெற்றோர் இருவரும் இல்லாத சூழலில், அவருடைய உடலைப் பெற்று இறுதிச் சடங்கு மேற்கொள்ள அமெரிக்காவில் உள்ள சில நண்பர்கள் முயன்று வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தொலைக்காட்சி நடிகையும் அமர்நாத்தின் நெருங்கிய தோழியுமான தேவோலீனா பட்டாச்சார்ஜி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர், “என் நண்பர் அமர்நாத் கோஷ் பிப். 27ஆம் தேதி மாலை அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் அகாடமியில் சுட்டுக் கொல்லப்பட்டார். குடும்பத்தில் அவர் ஒரே குழந்தை. அவருடைய தாய் 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சிறுவயதிலேயே அவருடைய தந்தையும் இறந்துவிட்டார். அவரைச் சுட்டுக் கொன்றவரின் விவரங்கள் அனைத்தும் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் உதவ வேண்டும். குறைந்தபட்சம் அவரது கொலைக்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்" என தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

இதுபற்றி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியில், ’தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் உதவியுடன் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது’ என தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவில், 2024ஆம் ஆண்டுமுதல் கடந்த 2 மாதங்களில் இந்திய மாணவர்கள் 4 பேர் தனித்தனியான தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்து உள்ளனர். தவிர வேறு வகையில் இந்தியர்கள் உயிரிழந்து வருகின்றனர். சமீபத்தில்கூட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சீக்கிய இசைக்கலைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இப்படி தொடர்ந்து அமெரிக்காவில் இந்தியர்களின் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்படுவதும் சமீபகாலங்களில் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com