model image x page
உலகம்

9 மாதங்கள்.. 61 பெண்கள்.. துன்புறுத்திய இந்திய மசாஜ் நிபுணர்.. ஆஸி.யில் சிறை!

அக்டோபர் 2021 முதல் ஜூலை 2022 வரை, அவர் 97 குற்றங்களைச் செய்துகொண்டதாக தெற்கு ஆஸ்திரேலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

Prakash J

ஆஸ்திரேலியாவில் 61 பெண்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்திய வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமித் சதீஷ் ரஸ்தோகி என்பவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சுமித் சதீஷ் ரஸ்தோகி என்பவர், கடந்த 2011ஆம் ஆண்டு அடிலெய்டுக்குக் குடிபெயர்ந்தார். அடிலெய்டின் மேற்குப் புறநகர்ப் பகுதியான கிளெனெல்கில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் நிபுணராகப் பணிபுரிந்தார். இந்தச் சூழலில், அங்கு வந்த பெண்களிடம் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் அவர் மீது விசாரணை நடைபெற்றது. அந்த வகையில், அக்டோபர் 2021 முதல் ஜூலை 2022 வரை, அவர் 97 குற்றங்களைச் செய்துகொண்டதாக தெற்கு ஆஸ்திரேலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

பாலியல் அத்துமீறல்

இதில் 55 பெண்களை ஆபாசமாகப் படம்பிடித்த குற்றங்களும், 42 பெண்களைக் கடுமையான பாலியல் வன்கொடுமை செய்த குற்றங்களும் அடங்கும். இதையடுத்து, அவருக்கு 13 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் 10 ஆண்டுகள் 10 மாதங்கள் பரோல் வழங்கப்படாது. இந்தத் தண்டனை அவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து முன்தேதியிடப்பட்டதால், அவர் 2035-ஆம் ஆண்டில் பரோலுக்குத் தகுதி பெறுவார். முன்னதாக, அவர் 2022இல் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் தனது தண்டனைக் காலத்தை நிறைவு செய்தபிறகு ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.