இந்தியாவிற்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில், இரு நாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க மற்றும் இந்திய தரப்பில் நிலவும் செயல்பாடுகள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிற்கும் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 25% வரியுடன், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி கூடுதலாக 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி நடவடிக்கையால், இந்தியாவின் ஜவுளி, காலணிகள், தோல், ரசாயனங்கள், நகைகள், ஜெம் கற்கள், மின்னணுப் பொருட்கள், கடல்சார்ந்த உணவுப் பொருட்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நொய்டா, சூரத், தமிழ்நாட்டின் திருப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் முடங்கியுள்ளன.
எனினும், ட்ரம்ப் அரசின் இது போன்ற வரி நெருக்கடிகளுக்கு அடி பணியாமல், அதை எதிர்கொள்வதற்கான வலிமையை இந்தியா அதிகரித்துக்கொள்ளும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். தவிர, அமெரிக்காவால் ஏற்படும் பாதிப்பைப் போக்க 40 நாடுகளுக்கு ஜவுளி பொருட்கள் ஏற்றுமதியை விரிவுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அதேசமயம், இழுபறியில் உள்ள அமெரிக்கா, இந்தியா இடையேயான பொருளாதார ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இதற்கிடையே, ”இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்த அமெரிக்காவிற்கு பதிலடியாக அவர்கள் பொருட்களுக்கு நாம் 100% வரி விதிக்க வேண்டும்" என டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார். மறுமுனையில், ”நாம் எந்தவொரு நாட்டையும் பெரிய அளவில் சார்ந்து இருக்கக் கூடாது. ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதி தொடர்பான தனது கொள்கையை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஆனால், அமெரிக்காவோ இந்த விஷயத்தில் தொடர்ந்து இந்தியா மீது குற்றஞ்சாட்டி வருகிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவாரோ, ”உக்ரைன் மீது போர் நடத்துவது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய்யை வாங்கிக் குவித்து அதிகளவில் இந்தியா தரும் பணம்தான் உக்ரைன் மீது ரஷ்யா ஆக்ரோஷமாக போர் புரிய வைக்கிறது” எனக் கடுமையாகக் குற்றஞ்சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில், ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. “ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கும் சீனா மற்றும் இதர நாடுகளுக்கு அதிக வரி விதிப்பதை விட்டுவிட்டு, ட்ரம்ப் இந்தியாவுக்கு அதிக வரி விதித்திருக்கிறார். இதன்மூலம் அமெரிக்கர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அமெரிக்க - இந்திய உறவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படும். உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கவே இந்த நடவடிக்கை. இது உக்ரைன் போருக்கானது மட்டுமல்ல, பின்னணியில் வேறு ஏதோ இருக்கிறது. இந்த விவகாரம் உக்ரைன் பற்றியதுபோல இல்லை. அதிபர் ட்ரம்ப் ஈகோ காரணமாக இப்படிச் செயல்படுகிறார், அவரின் செயல் தவறானது” என அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதற்கிடையே, “இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50% வரி விதித்ததற்குக் காரணம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பிரச்னை அல்ல, மாறாக டொனால்டு ட்ரம்பின் தனிப்பட்ட கோபம்தான்” என்று அமெரிக்க முதலீட்டு வங்கியான ஜெஃப்ரீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, "இந்தியா-பாகிஸ்தான் இடையில் நீடித்து வரும் நீண்ட நாள் மோதலில் ட்ரம்பின் தலையீட்டை இந்தியா அனுமதிக்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது" என்று ஜெஃப்ரீஸ் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானுடனான பிரச்னைகளில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா ஒருபோதும் அனுமதிப்பதில்லை. இதை, உலக அமைதிக்கான நோபல் பரிசை வெல்லும் தனது முயற்சிக்கு தடையாக ட்ரம்ப் கருதியதால், இந்தியா மீது இந்த வரி விதிப்பை விதித்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த நிலையில், இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எடுத்த இந்த நடவடிக்கை, அவமரியாதை மற்றும் அறியாமை கொள்கையை பிரதிபலிக்கிறது என்று அமெரிக்க பத்திரிகையாளர் ரிக் சான்செஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியா தனது நிலைப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டதற்காகப் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவை அதன் முடிவெடுக்கும் செயல்முறைகளில், மேற்பார்வை செய்யும் அமெரிக்க அணுகுமுறையையும் விமர்சித்துள்ளார்.
“இது (ட்ரம்ப் நிர்வாகத்தின்) ஓர் அவமரியாதை மற்றும் அறியாமைக் கொள்கை. ஏனென்றால், ரஷ்யாவின் பார்வையில் இருந்து உக்ரைன் போருக்கான அடிப்படையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர் யாருக்கு தடை விதிக்கிறார், ஏன் தடை விதிக்கிறார், எப்போது தடை விதிக்கிறார் என்பதற்கு எந்த குறிப்பிட்ட கருத்தோ, காரணமோ இல்லை. அது நல்லதல்ல. அவர்களுக்கு ஓரளவு நிலைத்தன்மை உணர்வு இருக்க வேண்டும். இந்தியா போன்ற வரலாறு, வளங்கள் மற்றும் திறன்களைக் கொண்ட ஒரு நாட்டை பள்ளிக் குழந்தையைப் போல நடத்தத் தொடங்கும்போது அவமரியாதையாகிறது.
இந்தியா ஒரு பெரிய பையன். ஒரு பள்ளிக் குழந்தை அல்ல.
இந்தியா ஒரு பெரிய பையன். ஒரு பள்ளிக் குழந்தை அல்ல. இந்தியா அமெரிக்காவிடம், 'நாங்கள் யாரிடமிருந்து எண்ணெய் வாங்கலாம் அல்லது வாங்கக்கூடாது என்று நீங்கள் சொல்லக் கூடாது’ என்று கூறியபோது அது ஒரு பேரழிவு தரும் மாற்றத்தை ஏற்படுத்தும் தருணமாகும். அதற்காக அமெரிக்கா வீழ்ச்சியில் உள்ளது என்று அர்த்தமல்ல. எனினும், இன்று பல அமெரிக்கத் தலைவர்கள் வருத்தப்படும் விஷயங்களில் ஒன்று, கடந்த காலத்தைவிட இன்று மோசமாக உள்ளது. எந்தவொரு பிரச்னையின் தோற்றம், வரலாறு மற்றும் கலாசாரத்தைப் புரிந்துகொள்ள விரும்பாதது. அவர்களின் எதிர்வினை பெரும்பாலும் கேபிள் செய்திகளில் அவர்கள் பார்த்ததை அடிப்படையாகக் கொண்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ”இந்தியா அமெரிக்காவிற்கு தலைவணங்காது. அதற்கு பதிலாக புதிய சந்தைகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தும்” என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடந்த கட்டுமானத் துறை நிகழ்வில் பேசிய பியூஷ் கோயல், "யாராவது எங்களுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பினால், இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. ஆனால், இந்தியா ஒருபோதும் அடிபணியாது அல்லது பலவீனமாகத் தோன்றாது. நாங்கள் தொடர்ந்து ஒன்றிணைந்து புதிய சந்தைகளைக் கைப்பற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் அரசுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர், இதை எதிர்த்து அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ’அதிபர் ட்ரம்ப் விதித்திருக்கும் வரிகள் சட்டவிரோதமானவை என்றும் அதிக வரிகளை விதிக்க அதிபருக்கு அதிகாரம் கிடையாது என்றும், சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின்கீழ் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அதிகாரத்தை மீறி இருக்கிறார்’ என உத்தரவிட்டு வரிகளை ரத்து செய்தனர். இதன்மூலம், நியூயார்க் வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பை, கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏறக்குறைய உறுதிசெய்துள்ளது. மேலும், ட்ரம்ப் அரசு இதில் மேல்முறையீடு செய்ய அக்டோபர் 14-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் தனது தீர்ப்பை அமல்படுத்துவதை அக்டோபர் வரை ஒத்திவைத்துள்ளதால், கட்டணங்கள் தற்போதைக்கு அமலில் இருக்கும். எனினும், இந்தத் தீர்ப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அதிபர் ட்ரம்ப், ”அனைத்து வரிவிதிப்புகளும் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. இந்த வரிகள் நீக்கப்பட்டால், அது நாட்டுக்கு ஒரு முழுமையான பேரழிவாக இருக்கும். இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுமானால், அது அமெரிக்க நாட்டையே அழித்துவிடும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். நீதிமன்றத்தில் இந்தச் சவாலை எதிர்கொள்வோம். அந்தச் சவாலில் அமெரிக்கா வெற்றி பெறும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தப்படுமானால், அது அமெரிக்க நாட்டையே அழித்துவிடும். இந்தத் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம்.டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க அதிபர்
ஒருவேளை, இதனை எதிர்த்து அதிபர் ட்ரம்ப் தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டால், வரிகள் ரத்து செய்யப்படும். இது அமெரிக்காவுக்கு பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற பார்வையுமிருக்கிறது. அதோடு ஏப்ரல் 2ம் தேதி முதல் பரஸ்பர வரி என்று பெயரில் வசூலிக்கப்பட்ட தொகையை திரும்பச் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.