ஈரான் எண்ணெய் கப்பல் web
உலகம்

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி.. விதிகளை தளர்த்திய அமெரிக்கா.. இந்திய நிறுவனங்கள் தயார்!

அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தியதைத் தொடர்ந்து, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீண்டும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்குத் திட்டமிட்டு வருகின்றன.

Premkumar S

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணை பகுதியை ஈரான் முடக்கியது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 1 பேரல் கச்சா எண்ணெய் 100 டாலருக்கு மேல் விலை உயர்ந்த நிலையில், இந்தப் பாதிப்பை சரி செய்ய ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா பல்வேறு நாடுகளுக்கும் குறுகிய கால அனுமதி அளித்திருந்தது. ஆனாலும், அதிகளவிலான எரிபொருள் தேவையின் காரணமாக இந்தியா, சீனா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

கச்சா எண்ணெய்

ஒருகாலத்தின் இந்தியாவின் முக்கிய எண்ணெய் இறக்குமதி நாடாக ஈரான் இருந்தது. ஆனால், அமெரிக்காவின் பொருளாதார தடையின் காரணமாக இந்தியா ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி வைத்திருக்கும் நிலையில், கடலில் கப்பல்களில் தேங்கியுள்ள ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய அமெரிக்க கருவூலத்துறை குறுகிய கால அனுமதியை இன்று வழங்கியுள்ளது. இதன்மூலம், உலகச் சந்தைகளுக்கு சுமார் 140 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யைக் கொண்டு வருவதோடு, எரிசக்தி விநியோகத்தில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும் என்று கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம், பயனடையும் நாடுகளில் இந்தியா முக்கியமானதாக இருக்கும்.

மேலும், இது ஏப்ரல் 19-ஆம் தேதி வரை இத்தளர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஈரான், பொதுவாக மற்ற நாடுகளைவிடக் குறைந்த விலையிலும், காப்பீடு மற்றும் போக்குவரத்துச் செலவுகளில் பெரும் சலுகைகளை வழங்குகிறது. இது இந்தியாவின் இறக்குமதிச் செலவைக் கணிசமாகக் குறைக்கும்.

கச்சா எண்ணெய்

மத்திய கிழக்கு நாடான ஈரான் இந்தியாவுக்கு மிக அருகில் இருப்பதால், கச்சா எண்ணெய் வந்து சேரும் காலம் மிகவும் குறைவு. இது விநியோகச் சங்கிலியை எளிதாக்கும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பிபிசிஎல் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கான ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன.