மத்திய கிழக்குப் போர் | ”யாருக்கும் ஆதரவில்லை” - இலங்கை எடுத்த திடீர் முடிவு!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்தத்தில் இலங்கை எந்த தரப்பினருக்கும் ஆதரவளிக்காது என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். உலக சமாதானத்திற்காக நடுநிலையான கொள்கையுடன் செயல்படுவோம் என்றும், எரிபொருள் விநியோக சவால்களை சமாளிக்க சர்வதேச ஒத்துழைப்புகளை பயன்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்.
இலங்கைச் செய்தியாளர் ; வி.காந்தகுமார்
மத்தியக் கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்தத்தில் எந்த தரப்பினருக்கும் நாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லை. நடுநிலையான கொள்கையுடன் எப்போதும் உலக சமாதானத்திற்காக நாங்கள் தலையீடுகளை மேற்கொள்வோம். அதன் பிரகாரம் எமது வெளியுறவுக் கொள்கையை நிலையாகப் பேணி வருகின்றோம் என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய கிழக்கின் போரினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஊழல் மோசடி இன்றி வெளிப்படைத் தன்மையுடன் நாங்கள் அரசாங்கத்தை முன்னெடுத்தபோது புதிய முதலீடுகள் மூலம் நாடு மேலேழுந்து வந்தபோது டித்வா புயல் ஏற்பட்டது. அப்போது எமக்கு சர்வதேச நாடுகள் உதவிகளை வழங்கின. சர்வதேச ஒத்துழைப்புகளுடன் அந்த சவால்களையும் வெற்றிபெற்று நாட்டை மீள் கட்டியெழுப்பும் நேரத்திலேயே உலகில் எதிர்பாராத யுத்தம் ஏற்பட்டது. இந்த யுத்தத்தின் பாதிப்பு முழு உலகத்திற்கும் ஏற்பட்டுள்ளது. முழு உலகத்தின் எரிபொருள் விநியோகம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது எமது அரசாங்கம் ஏற்படுத்தியது அல்ல. எமது முடியாமையினால் ஏற்பட்டது அல்ல. கடந்த காலங்களில் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் முகம்கொடுக்கக்கூடிய வசதிகளை ஏற்படுத்தியிருந்தால் இன்று இந்த பிரச்சினை எமக்கு ஏற்பட்டிருக்காது. இங்கு போதுமான எரிபொருள் சேமிப்பு வசதி கிடையாது
திருகோணமாலை எரிபொருள் இடங்களை மறுசீரமைத்து அதன்மூலம் எரிபொருள் சேமிப்புக்கான வசதிகளை ஏற்படுத்தவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே இந்தியாவுடன் இந்த விடயம் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டோம். எமக்கு இதுபோன்ற நிலைமைகளில் நிரந்தரமான தீர்வு அவசியமாகும். இதற்காக நாங்கள் திறைசேரி நிதி மூலம் எரிபொருள் தாங்கிகளை மறுசீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இப்போது உலக நாடுகளுக்கு எரிபொருள் விநியோக கப்பல்களுக்கு ஹார்முஸ் சந்தி கடல் ஊடாக வருவதில் பிரச்னை உள்ளது. ஆனால் எமக்கு வரும் கப்பல்கள் அங்கிருந்து வருவதில்லை.
இந்தியா, சிங்கப்பூரில் இருந்தே நாங்கள் எரிபொருள் கொள்முதலை செய்கின்றோம். இதேவேளை ஈரான் கப்பல்கள் தொடர்பில் இந்த நாடாளுமன்றத்தில் பொய்யான தகவல்கள் கூறப்பட்டன. மூன்று ஈரான் கப்பல்கள் இந்தியாவில் நடந்த நிகழ்வுக்குச் சென்றிருந்த போது, மார்ச் 9ஆம் தேதி முதல் மார்ச் 13ஆம் தேதி வரையில் இலங்கைக்கு வருவதற்காக பிப்ரவரி 26ஆம் தேதி அனுமதி கோரப்பட்டது. இதற்கு மேல் எதுவும் நடக்கவில்லை. மார்ச் 4ஆம் தேதியே குறிப்பிட்ட தாக்குதல் சம்பவம் நடந்தது. நாங்கள் சமுத்திர சட்டங்களுக்கு அமைய சகல விடயங்களையும் முன்னெடுத்தோம்.
சகல நாடுகளுடனும் நாங்கள் நட்புறவுடனும் நடந்துகொள்கின்றோம். எந்த நாட்டுடனும் எமக்குப் பிரச்னை கிடையாது. எமது வெளியுறவுக் கொள்கையை நிலையாக பேணுகின்றோம். இந்த யுத்தத்தில் எந்த தரப்பினருக்கும் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. உலக சமாதானத்திற்காக நாங்கள் தலைலயீடுகளை செய்வோம். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு சபையில் யோசனையொன்று கொண்டுவரப்பட்டது.
அது சமநிலையான யோசனை அல்ல. அதன்போது நாங்கள் சமநிலையற்ற யோசனைக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்பதனை தெளிவாக கூறினோம். இந்த யுத்தத்தை மூன்று தரப்பும் நிறுத்த வேண்டும். நாங்கள் எந்த நிலையிலும் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்ததில்லை. தேவையான இராஜதந்திரங்களை பயன்படுத்தி நாட்டுக்கு நன்மையளிக்கும் வகையில் நாங்கள் செயற்படுவோம். எரிபொருள் விடயத்தில் ரஷ்யாவுடன் பேசியுள்ளோம். அத்துடன் சீனா, இந்தியாவுடனும் கலந்துரையாடியுள்ளோம். இதனால் நாங்கள் முறையான தீர்மானங்களுடன் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்” என்றார்.

