ஸ்ரீசின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி எக்ஸ் தளம்
உலகம்

இந்து மதத் தலைவர் கைது.. வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்! யார் அந்த ஸ்ரீசின்மோய் கிருஷ்ண தாஸ்?

வங்கதேசத்தில் இந்து மதத் தலைவர் ஸ்ரீசின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி என்று அழைக்கப்படும் சந்தன் குமார் தர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

Prakash J

வங்கதேசத்தில் வெடித்த வன்முறை

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியது அரசையே கலங்கடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். என்றாலும், அந்நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் பேசுபொருளானது. இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை இந்தியா கண்டித்திருந்தது. அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டொனால்டு ட்ரம்புவும் கண்டித்திருந்தார்.

இந்துக்களுக்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல்

ஆனாலும், வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது முதல் தற்போது வரை, இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நிகழ்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதில் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், சொத்துகள், உடைமைகள் சேதமாக்கப்படுகின்றன. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என முகமது யூனுஷ் தலைமையிலான அந்நாட்டின் இடைக்கால அரசு உறுதியளித்த போதும் எந்த மாற்றமும் நிகழவில்லை. மாறாக, தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஹிந்து மத அமைப்பினர் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.

வங்கதேசத்தின் 170 மில்லியன் மக்களில் சுமார் 8 சதவீதம் இந்துக்கள் உள்ளனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேற்றப்பட்டதில் இருந்து, முகமது யூனுஸ் தலைமையிலான புதிய இராணுவ ஆதரவு இடைக்கால அரசாங்கம் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்காக விமர்சனங்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்துமதத் தலைவர் கைதுக்குக் கண்டனம்

இந்த நிலையில், வங்கதேசத்தில் இந்து மதத் தலைவர் ஸ்ரீசின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி என்று அழைக்கப்படும் சந்தன் குமார் தர் கைதுசெய்யப்பட்டிருப்பதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்ரீசின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டு அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது கவலையளிக்கிறது. வங்கதேசத்தில் பயங்கரவாத சக்திகளால் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட பல தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவங்களைச் செய்தவர்கள் தலைமறைவாக இருக்கும்போது, ​​அமைதியான கூட்டங்கள்மூலம் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்கும் ஒரு மதத் தலைவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்து மதத் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்தும் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. ”இந்துக்கள் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வங்காளதேச அதிகாரிகளை வலியுறுத்துகிறோம்” என அது தெரிவித்துள்ளது.

இந்துமதத் தலைவர் மீது கைது ஏன்?

சம்மிலிதா சனாதானி ஜோட் என்ற இந்து அமைப்பின் தலைவரான ஸ்ரீசின்மோய் கிருஷ்ண தாஸுக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்தே, அவர் டாக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. டாக்காவில் இருந்து வடக்கே 300 கிமீ தொலைவில் அமைந்துள்ள ரங்பூர் நகரில், சிறுபான்மையினருக்கு ஆதரவாக இந்து சமூகத்தினர் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது காவிக்கொடி ஏந்தியதற்காக தேச துரோகம் உள்பட 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

முன்னதாக, இஸ்கான் கோயில் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு வங்காளதேச அரசிடம் பேச வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தனர். “இஸ்கான் பங்களாதேஷின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஸ்ரீ சின்மோய் கிருஷ்ண தாஸ் ((வங்கதேசத்தில் உள்ள கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கத்தின் (ISKCON) முன்னாள் தலைவர்)) கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தோம். உலகம் முழுவதும் பயங்கரவாதத்துக்கும் இஸ்கானுக்கும் தொடர்பு இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மூர்க்கத்தனமானது. இதுதொடர்பாக இந்திய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வங்கதேச அரசு சின்மோய் கிருஷ்ண தாஸை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது.