usa எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்காவில் இருந்து 18,000 இந்தியர்கள் வெளியேற்றம்.. ட்ரம்ப் அரசுக்கு இந்தியா ஆதரவு!

அமெரிக்காவில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் சட்டவிரோதமாகக் குடியேறி இருப்பதாக சொல்லப்படுகிறது. முதற்கட்டமாக அவர்கள் வெளியேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Prakash J

அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். அதில் குடியேற்றக் கொள்கையும் ஒன்று. அதாவது, அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்கும் வகையில் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி உள்ளார். விரைவில் இங்கு, தடுப்புச் சுவர் அமைக்கப்பட இருக்கிறது.

அதேநேரத்தில், டொனால்டு ட்ரம்ப் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் முடிவில் உள்ளார். அந்த வகையில், இந்தியாவிற்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் சட்டவிரோதமாகக் குடியேறி இருப்பதாக சொல்லப்படுகிறது. முதற்கட்டமாக அவர்கள் வெளியேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.

modi, trump

மேலும் ஆவணமற்ற குடியேறிகள் அதிக அளவில் அடையாளம் காணப்படுவதால் இதன் எண்ணிக்கை வருங்காலங்களில் உயரக்கூடும். பியூ ஆராய்ச்சி மையத்தின்படி, அமெரிக்காவில் 7,25,000 ஆவணமற்ற இந்திய குடியேற்றவாசிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் மெக்சிகோ மற்றும் எல் சால்வடார் நாடுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய குழுவாக உள்ளனர். இந்தியா - அமெரிக்கா மேற்கொண்ட ஆய்வில் இது உறுதியாகி உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவர்களை வெளியேற்றும் பணியில் அமெரிக்காவுடன் சேர்ந்து நம் நாடு ஈடுபட தயாராக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனினும், இந்திய அரசாங்கம் நாடு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சட்டவிரோத குடியேற்றத்தின் சிக்கலைச் சமாளிக்க இந்தியா அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகக் கூறியது. இதற்கு முக்கிய காரணம், ட்ரம்ப் தன்னுடன் மோதலை கடைப்பிடிக்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்க முடிவு செய்துள்ளார். இதனால் அவருடன் இணக்கமாகச் செயல்பட நம் நாடு முடிவு செய்துள்ளது. அதோடு இருநாடுகள் இடையேயான வர்த்தக போரை தவிர்க்கவும் நம் நாடு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “குடியேற்றம் மற்றும் போக்குவரத்து தொடர்பான விவகாரங்களில் அமெரிக்காவுக்கு, இந்தியா ஒத்துழைப்பு வழங்கும். சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் செயல்பாட்டில் இருநாடுகளும் ஈடுபட்டு வருகிறோம். அதேபோல் இந்தியாவில் இருந்து அதிகமானவர்கள் அமெரிக்காவுக்கு சட்டப்பூர்வமாகச் செல்வதற்கான வழிகளை ஏற்படுத்தவும் செயல்பட்டு வருகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

h1b visa

அதேநேரத்தில், குடிமக்கள் தொடர்ந்து H-1B விசா பெறுவதை உறுதி செய்வதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த திறமையானவர்களுக்கான H-1B விசாவின் நிலையைப் பாதுகாப்பதே இந்திய அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாக உள்ளது. கடந்த 2023ஆண்டுபடி, அனைத்து H-1B விசாக்களிலும் கிட்டத்தட்ட 75% இந்தியர்களே உள்ளனர்.