இந்தியா மற்றும் சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பதற்றம் நீடித்து வரும் நிலையில், திபெத்தை இந்தியாவுக்கு எதிராக வலுவான ராணுவ பாதுகாப்பு மண்டலமாக சீனா மாற்றி வருவதாக இந்திய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, திபெத்தில் சீனா 'இரட்டை உத்தி' (Twin Strategy) ஒன்றை பின்பற்றி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த இரட்டை உத்தியின் முதல் அம்சம், திபெத் முழுவதும் ராணுவ உள்கட்டமைப்பை மிக வேகமாக விரிவுபடுத்துவதாகும். அதிவேக நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், சுரங்கங்கள், பாலங்கள், விமானத் தளங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் மற்றும் ட்ரோன் இயக்க மையங்கள் போன்ற கட்டமைப்புகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன.
இவை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்படுவதாக கூறப்பட்டாலும், அவசர காலங்களில் சீன மக்கள் விடுதலை ராணுவம் (PLA) விரைவாக வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை எல்லைப் பகுதிகளுக்கு நகர்த்துவதற்கு பயன்படும் எனக் கூறப்படுகிறது.
இரண்டாவது அம்சமாக, திபெத்தின் பாரம்பரிய அடையாளத்தை மாற்றும் முயற்சிகளை சீனா மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. திபெத்திய மொழி, புத்த மத பாரம்பரியம் மற்றும் உள்ளூர் கலாச்சாரத்தின் மீது சீனாவின் கட்டுப்பாடு அதிகரித்து வருவதாகவும், புதிய குடியிருப்புகள் அமைத்தல், நிர்வாக மாற்றங்கள் மற்றும் சீன கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் திட்டங்கள் மூலம் திபெத்தை முழுமையாக சீன நிர்வாக அமைப்புடன் ஒருங்கிணைக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில், திபெத் வாட்ச் அமைப்பின் அறிக்கையின் மூலம் கிழக்கு திபெத்தில் உள்ள லாருங் கார் (Larung Gar) என்ற முக்கிய பௌத்த சின்னங்களில் ஒன்று இடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கும் நிலையில், இந்திய உளவுத்துறையின் இந்த மதிப்பீடுகள் வெளியாகியுள்ளன.
இந்தச்சூழலில் தான், லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை உள்ள எல்லைப் பகுதிகளில் சீனாவின் ராணுவ திறன் தொடர்ந்து அதிகரித்து வருவது இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்தியாவும் எல்லைக் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது.
திபெத்தில் சீனா மேற்கொண்டு வரும் இந்த இரட்டை உத்தி, எதிர்காலத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்பு சூழலில் புதிய சவால்களை உருவாக்கக்கூடும் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.