ஷெபாஸ் ஷெரீப், படேல் கெலாட் AFP, x page
உலகம்

ஆபரேஷன் சிந்தூர் | ஐ.நாவில் பாகிஸ்தான் வைத்த குற்றச்சாட்டு.. பதிலடி கொடுத்த இந்தியா!

ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

Prakash J

ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதும் பல நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றி வருகின்றனர். அந்த வகையில் நேற்று உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “பாகிஸ்தான் பலமான நிலையில் இருந்தபோதிலும், அதிபர் ட்ரம்பின் துணிச்சலான மற்றும் தீவிரமான தலைமையால் எளிதாக்கப்பட்ட போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது. போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் அவருக்கும் அவரது குழுவினருக்கும் எங்கள் ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

pak pm

ட்ரம்பின் அற்புதமான மற்றும் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, பாகிஸ்தான் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தது. அவர் அமைதியை நேசிப்பதற்காக நாம் செய்யக்கூடிய குறைந்தபட்ச விஷயம் இதுதான். உண்மையிலேயே, அவர் ஓர் அமைதியான மனிதர். ட்ரம்ப் சரியான நேரத்தில் மற்றும் தீர்க்கமாக தலையிடாவிட்டால், ஒரு முழுமையான போரின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும்” என்றார்.

ஆனால், இதை இந்தியா மறுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நாவுக்கான இந்தியா முதன்மைச் செயலாளர் பட்டேல் கெலாட், “ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது. பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் மட்டத்தில் மன்றாடி கேட்டதாலேயே தாக்குதலை நிறுத்தினோம். இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் 3ஆம் நபர் தலையீட்டிற்கு இடமில்லை. பிரச்னைகளை இருநாடுகளுமே பேசி தீர்த்துக்கொள்ளும். அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா பணியாது” என்றார்.

பட்டேல் கெலாட்

பாகிஸ்தானுக்கு எதிரான போரை, தாமே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி வரும் நிலையில், அதை, ஐ.நா. சபையிலும் இந்தியா மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.