கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி, கடந்த 14ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, வரும் அக்டோபர் மாதம் வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து அடுத்த மாதம் 28ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்த அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, கனடாவில் உள்ள 343 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. 172 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறும் கட்சி, ஆட்சி அமைக்கும். தற்போது லிபரல் கட்சி மற்றும் கன்சர்வேடிவ் கனடா கட்சிகளிடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது. ட்ரம்பின் வரி விதிப்பு, அச்சுறுத்தல் உள்ளிட்டவை குறித்து பிரசாரத்தில் முன்னிலைப்படுத்த இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.
இந்த நிலையில், கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சீனா, இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தலையிட முயற்சிக்கக்கூடும் என அந்நாட்டின் உளவுத் துறை எச்சரித்துள்ளது.
தேர்தல் குறித்து அந்நாட்டு உளவுத் துறையின் துணை இயக்குநர் வனேசா லாயிட், ”கனடா தேர்தலில், ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வாய்ப்புள்ளது. இந்தியா, தனது அரசியல் செல்வாக்கை மேலும் வலுப்படுத்த, கனடா தேர்தலில் தலையிடுவதற்கான நோக்கத்தையும் திறனையும் கொண்டுள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அதுபோல், கனடாவின் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்த சீன அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கனடாவில் உள்ள சீன இன, கலாசார மற்றும் மதச் சமூகங்களைக் குறிவைத்து அவர்களுக்கு உடன்படுபவர்களுக்கு ஆதரவான கதைகளை சமூக ஊடகங்கள் மூலம் சீனா பரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ரஷ்யாவும் பாகிஸ்தானும் கனடா தேர்தலில் தலையிட வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலிலும் இந்தியா, சீனா தலையிட முயற்சித்தது. ஆனால், எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த கனடா தேர்தலில் தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ஏற்கெனவே இந்தியாவும் சீனாவும் மறுத்துள்ளது. புதிய குற்றச்சாட்டு தொடர்பாக இரு நாடுகளும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 2023இல் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பிறகு இருநாட்டின் உறவில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.