கனடா | நாடாளுமன்றம் கலைப்பு.. ஏப்ரல் 28 தேர்தல்!
கனடாவில் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியதுடன், அவர் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில், மார்க் கார்னிக்கு வரும் அக்டோபர் மாதம் வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில், அதாவது பிரதமராகப் பதவியேற்றுப் பத்து நாள்களே ஆகும் நிலையில், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து அடுத்த மாதம் 28ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், ”ட்ரம்ப் நம்மை உடைக்க விரும்புகிறார். அது நடக்க நாங்கள் விடமாட்டோம். ட்ரம்பின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
கனடாவில் உள்ள 343 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. 172 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறும் கட்சி, ஆட்சி அமைக்கும். தற்போது லிபரல் கட்சி மற்றும் கன்சர்வேடிவ் கனடா கட்சிகளிடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது. ட்ரம்பின் வரி விதிப்பு, அச்சுறுத்தல் உள்ளிட்டவை குறித்து பிரசாரத்தில் முன்னிலைப்படுத்த இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.