pakistan x page
உலகம்

இம்ரான் ஆதரவு போராட்டங்களில் வெடித்த வன்முறை! தத்தளிக்கும் பாகிஸ்தான்! தினமும் 14,400 கோடி இழப்பு!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக் கோரி போராட்டக்காரர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நுழைந்தபோது வன்முறை வெடித்தது.

Prakash J

பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி

அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தத் தேர்தலில் இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்பட்ட நிலையில், சுயேட்சைகளாக அவரது கட்சியினர் களமிறங்கினர். அப்படியிருந்தாலும் சுமார் 90 இடங்களில் அவர்கள் வென்றனர். இருப்பினும், 3 முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து, கூட்டணி அரசை அமைத்துள்ளன. அதன்படி, பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப், 2வது முறையாக பதவியேற்றார். இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்கக் கோரி போராட்டக்காரர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நுழைந்தபோது வன்முறை வெடித்தது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

ஓராண்டுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் இம்ரான் கான்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், ஓராண்டுக்கும் மேலாகச் சிறையில் உள்ளார். அவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் ஊழல் மற்றும் வன்முறை தொடர்பாக 150க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இதில், ஒருசில வழக்குகள் மீது ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒருசில வழக்குகளில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என்றாலும், அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.

சமீபத்தில், வழக்கு ஒன்றில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீன் கிடைத்த சில மணி நேரத்தில், இதர வழக்குகளில் இம்ரான் கானை ராவல்பிண்டி போலீஸார் கைதுசெய்தனர். முன்னதாக, இம்ரான் கான் நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து இருந்ததாகவும், தனக்கு எதிராகச் சதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த சதியை முறியடிக்க மக்கள் நாடு முழுக்க போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இம்ராம் கானை விடுவிக்கக்கோரி ஆதரவாளர்கள் போராட்டம்

இந்த நிலையில், இம்ரானை விடுவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் நேற்று (நவ.25) தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். இந்தப் பேரணியில் ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்தப் பேரணியில் பலர் காயமடைந்தனர். தவிர, வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்தனர்.

இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. தற்போது, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, போராட்டக்காரர்களைக் கண்டால் சுட உத்தரவிடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்லாமாபாத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அரசாங்கம் சில பகுதிகளில் மொபைல் போன் சேவைகளை நிறுத்திவைத்துள்ளது. தவிர, தலைநகரில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதையும் தடை செய்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் நக்வி, ”இந்த வன்முறையின்போது காவலர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 12க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்கள் மற்றும் அதற்கு ஆதரவளித்தவர்கள் காவல் துறையினரின் உயிரிழப்புகளுக்குப் பொறுப்பு” எனத் தெரிவித்துள்ளார்.

தினமும் சுமார் 144 பில்லியன் ரூபாய்

ஏற்கெனவே, சர்வதேச நாணய நிதியத்தால் நிர்வகிக்கப்படும் கடன் மற்றும் சீர்திருத்தத் திட்டத்தின்கீழ் நாட்டின் பலவீனமான பொருளாதாரத்தைச் சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஷெரீப்பின் அரசாங்கத்திற்கு புதிய எதிர்ப்புகள் சவாலாக நிலையில், இந்தப் பிரச்னை மேலும் தலைவலியைக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, நிதியமைச்சர் முஹம்மது ஔரங்கசீப்பின் கூற்றுப்படி, அமைதியின்மை காரணமாக பொருளாதாரத்திற்கு தினமும் சுமார் 144 பில்லியன் ரூபாய் ($518 மில்லியன்) செலவாகிறது என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.