இம்ரான் கான் Reuters
உலகம்

நான் உயிருடன் திரும்புவேனா தெரியவில்லை? - பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடிதம்!!

ஊழல் மற்றும் பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தான் உயிருடன் வெளியே வருவேனா தெரியவில்லை எனத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Premkumar S

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் (Imran Khan), கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் தனது பதவியை இழந்தார். அப்போது அவர் பதவியிழந்ததற்கு அமெரிக்காவின் ரகசிய சதிதான் காரணம் என்று அவர் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த நிகழ்வுக்கு பின்னர் இம்ரான் கானின் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டதோடு, ஊழல் புகாரில் இம்ரான் கான் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், சிறையில் இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை எனக் கோரி இம்ரானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது, சிறையிலேயே இறந்து விட்டார் என்ற வதந்திகளும் வெளியாகி பாகிஸ்தானில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தான், தனது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், தான் உயிருடன் திரும்புவேனா? எனத் தெரியவில்லை எனவும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கு இம்ரான் கான் எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில், தனது வலது கண்ணில் 85 சதவீத பார்வையை இழந்துவிட்டதாகவும், ரத்த அழுத்தம் ஆபத்தான அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி முதல் நாளொன்றுக்கு 22 மணி நேரம் வரை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், குடும்பத்தினரையும் வழக்கறிஞர்களையும் சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தனது மகன்களான காசிம் மற்றும் சுலைமானுடன் தொலைபேசியில் பேசுவதற்குக்கூட அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தனது உடல்நிலை மட்டுமின்றி, மனைவி புஷ்ரா பீபியின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்றி, சிறப்பு மருத்துவக் குழுவின் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த உத்தரவு இதுவரை முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை என அந்தக் கடிதத்தில் இம்ரான் கான் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே, தனக்கும் தனது மனைவிக்கும் உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்றும், ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தனது உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்றும், காலம் கடந்து விடுவதற்கு முன்பாக நீதி வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.