இந்தியாவில் ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம், யுனானி என பல முறைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல நாடுகளுக்கு முன்னோடியாக மருத்துவத்துறையில் இந்தியா திகழ்ந்து வருகிறது. சீனாவை பொறுத்தவரை அங்கு பாரம்பரிய சீன மருத்துவ முறையே பல இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.
சீன மருத்துவம் என்பது மூலிகை மருத்துவம், குத்தூசி மருத்துவம், உடற்பயிற்சி, உணவு சிகிச்சை மற்றும் மனப்பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். அதில், குத்தூசி மருத்துவம் என்பது அக்குபஞ்சர் என அனைவராலும் அறியப்பட்ட மருத்துவம் ஆகும். இந்த முறையில், நோய்களுக்கு ஏற்ப உடலின் குறிப்பிட்ட புள்ளிகளில் ஊசியை செலுத்தி உடலின் ஆற்றல் சமநிலையை சீர்ப்படுத்தும் முறையாகும்.
சீனாவை சேர்ந்த காவோ என்ற நபர் புற்றுநோய் அல்லாத தீங்கற்ற கட்டியால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக இவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், காவோவின் மனைவி ஜாங் அவரது நண்பரிடம் காவோவின் நிலை குறித்து பேசியுள்ளார். ஜாங்கின் நண்பர் ஒருவர் ஒரு அக்குபஞ்சர் மருத்துவரை அவருக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த மருத்துவ சிகிச்சை சைபர் கவே என்னும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிகிச்சைக்காக காவோ அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அந்த மருத்துவர் சிகிச்சைக்காக காவோவின் உடலில் ஒரு புள்ளியில் ஊசியை செலுத்திய சிறிது நேரத்திலேயே அவருக்கு அசவுகரியமாகவும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, காவோவை அவரது மனைவி ஜாங் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். காவோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட காவோ, மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் உயிர் பிழைத்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், “சிறிது நேரம் தாமதித்திருந்தாலும் காவோவின் உயிர் பிழைத்திருக்க முடியாது” எனத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் காவோவின் மனைவி ஜாங் புகாரளித்தார். புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் காவோவிற்கு அக்குபஞ்சர் சிகிச்சை செய்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காவோவிற்கு சிகிச்சை அளித்தவர் “போலி மருத்துவர்” என கண்டறியப்பட்டது.
மேலும், அந்த போலி மருத்துவரின் தந்தையிடம் இதுக்குறித்து விசாரணை மேற்கொண்டபோது, “எனது மகன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத மருத்துவர். அவர் அந்த படிப்பும் படிக்கவில்லை. அருகில் உள்ள அக்குபஞ்சர் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதை பார்த்து எனது மகன் மற்றவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.
சீனாவின் சட்டப்படி, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள், அரசாங்கத்தில் பதிவான மருத்துவமனைகளில் மட்டுமே பணியாற்றவேண்டும். சட்டத்தை மீறி சீனாவில் மருத்துவ உரிமம் இல்லாமல் செயல்படும் நபர்களுக்கு நோயாளிகளின் உடல்நிலையை பொறுத்து மூன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.