வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, ஐ.நா மனித உரிமைகள் குழுவை அணுக சர்வதேச சட்ட வல்லுநர்கள் கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்த தீர்ப்பு வங்கதேசத்தில் அமைதியின்மையைத் தூண்டக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். ஹசீனாவுக்கு போதுமான சட்டப் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டதாகவும், அவசர விசாரணை நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்தாண்டு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 5 வரை அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 1,400 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 22 ஆயிரம் பேர் காயமடைந்திருந்தனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. ஹசீனாவின் செயல் மனித குலத்திற்கே எதிரானது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டதை எதிர்த்து வங்கதேசம் முழுவதும் கடும் பதற்றம் எழுந்துள்ளது. பிப்ரவரி தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வெளியாகியுள்ள இந்த தீர்ப்பு, வங்கதேசத்தில் அமைதியின்மையைத் தூண்டக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் உயிர்வாழும் உரிமையைப் பாதுகாக்கவும், நியாயமான விசாரணை நடத்தவும் அவசர தலையீட்டைக் கோரி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவை அணுக திட்டமிட்டுள்ளதாக சர்வதேச சட்ட வல்லுநர்கள் கவுன்சில் (ICJ) அறிவித்துள்ளது. ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்து சர்வதேச அளவில் பரவலான கவலைகள் எழுந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நியாயத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் அரசியல் நடுநிலைமை குறித்து வளர்ந்து வரும் கேள்விகளுக்கு மத்தியில், எந்தவொரு சாத்தியமான நாடு கடத்தலையும் எதிர்த்துப் போராட ஷேக் ஹசீனாவுக்கு வலுவான சட்டப்பூர்வ காரணங்கள் இருக்கின்றன என ICJ வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஹசீனாவுக்கு போதுமான சட்டப் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டுள்ளது. தன்னைத் தற்காத்துக்கொள்ள உரிய வழங்கப்படவில்லை; அவசரமாக, ரகசியமாக, மற்றும் கடுமையான நடைமுறை தவறுகளோடு நடந்த ஒரு சட்ட நடவடிக்கைக்கு அவர் உட்படுத்தப்பட்டார் என்பதைக் குறிக்கும் பல அறிக்கைகளை ICJ தலைவர் அகர்வாலா சுட்டிக்காட்டியுள்ளார்.
”மரண தண்டனை வெளிப்படையான நடவடிக்கைகள் மற்றும் தெளிவான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இங்கே, நீதியின் அத்தியாவசிய கூறுகள் வெளிப்படையாக இல்லை. முழு செயல்முறையும் அரசியல் ரீதியாக உந்துதல் பெற்றதாகவும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்கீழ் வங்கதேசத்தின் கடமைகளுக்கு இணங்காததாகவும் தோன்றுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வாய்ப்பு இருப்பதாக வெளியான தகவல்கள் குறித்து கருத்து தெரிவித்த அகர்வாலா, ”நியாயமற்ற விசாரணையை எதிர்கொள்ளும் நாடுகளுக்கோ அல்லது துன்புறுத்தல், சித்திரவதை மற்றும் உரிய நடைமுறை இல்லாமல் மரண தண்டனை விதிக்கப்படும் அபாயம் உள்ள நாடுகளுக்கோ குற்றம்சாட்டப்பட்டவர்கள் நாடு கடத்துவதை சர்வதேச சட்டம் தடை செய்கிறது. சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகளுக்கு உறுதியளித்த நாடான இந்தியா, தற்போதைய சூழ்நிலையில் ஷேக் ஹசீனாவை சட்டப்பூர்வமாகவோ அல்லது தார்மீக ரீதியாகவோ நாடு கடத்த முடியாது. வங்கதேசத்தில் நடக்கும் நிகழ்வுகளை சர்வதேச சமூகம் கண்காணிக்க வேண்டும். நீதிமன்றங்கள் அரசியல் பழிவாங்கும் கருவிகளாக செயல்படக்கூடாது” என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நியாயமற்ற விசாரணை, அரசியல் துன்புறுத்தல், சித்திரவதை அல்லது உரிய நடைமுறை இல்லாமல் மரண தண்டனையை எதிர்கொண்டால் யாரையும் நாடு கடத்த முடியாது” என்ற ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
சர்வதேச சட்ட வல்லுநர்கள் கவுன்சில் (ICJ) என்பது ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் உலகளவில் நீதியை மேம்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சுதந்திரமான சட்ட அமைப்பாகும். இந்த அமைப்பு, சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச நீதிபதிகள் ஆணையம் இரண்டிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு புதுடெல்லி கிளையில் இந்த அமைப்பின் தலைவராக உள்ள அகர்வாலா, இந்திய பார் கவுன்சிலின் துணைத் தலைவராகவும் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷனின் தலைவராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, இந்த அமைப்பில் வங்கதேசத்தின் நீதிபதிகள் சிலர் துணைத் தலைவர்களாக இருந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.