தேஜாஸ் போர் விமானம் எக்ஸ் தளம்
உலகம்

துபாய் கண்காட்சியில் துயரம் | விபத்துக்குள்ளான இந்தியாவின் ’தேஜஸ்’ போர் விமானம்.. A to Z தகவல்கள்!

துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தித் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

Prakash J

துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தித் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

துபாயில் விபத்துக்குள்ளான இந்திய போர் விமானம்

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பார்வையாளர்களுக்கான துபாய் விமானக் கண்காட்சியான, ’துபாய் ஏர் ஷோ-25’ கடந்த நவம்பர் 17ஆம் தேதி, துபாய் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கியது. எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் 40வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு, இன்றுடன் முடிவடைகிறது. இந்த பிரமாண்டமான விமான கண்காட்சிக்காக 150 நாடுகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் துபாய்க்கு வந்திருந்தனர், மேலும் ஒம்பார்டியர், டசால்ட் ஏவியேஷன், எம்ப்ரேயர், தேல்ஸ், ஏர்பஸ், லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் காலிடஸ் போன்ற முன்னணி விண்வெளி நிறுவனங்களும் பங்கேற்றன.

இந்த நிலையில், இன்று இந்திய விமானப் படையின் தேஜஸ் இலகுரக போர் விமானம் (LCA Mk-1) வானில் சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தபோதே எதிர்பாராத விதமாக கீழே விழுந்து வெடித்தது. இந்த விபத்து இன்று பிற்பகல் 2.10 மணிக்கு நிகழ்ந்தது. இதில் விமானி உயிரிழந்து விட்டதாக இந்திய விமானப்படை (IAF) உறுதிப்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

தேஜஸ் விமானத்தின் சிறப்புகள் என்ன?

மறுபுறம், இந்த தேஜஸ் போர் விமானம், இந்திய விமானப் படைக்காக இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி (ADA) ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்ட ஒற்றை எஞ்சின், பல்துறை இலகுரக போர் விமானமாகும். இருப்பினும் இது, வெளிநாட்டு இயந்திரங்களைக் கொண்டது. தேஜஸ் என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும். சமஸ்கிருதத்தில் ’ரேடியன்ஸ்’ என்று பொருள்படும் இதன் பெயர் 2003இல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் பொருள் முதன்மையாக பிரகாசம் மற்றும் கூர்மை எனச் சொல்லப்படுகிறது. இது நெருப்பு, ஒளி மற்றும் ஆற்றலையும் குறிக்கிறது.

தேஜாஸ் என்பது 4.5 தலைமுறை பல்-பங்கு போர் விமானமாகும், இது வான் பாதுகாப்பு, தாக்குதல் விமான ஆதரவு மற்றும் நெருக்கமான போர் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவ்வகை ஜெட் விமானத்தின் முக்கிய அம்சம், அதன் மார்ட்டின்-பேக்கர் 0.0 வெளியேற்ற இருக்கை ஆகும். இது விமானிகள் பூஜ்ஜிய உயரத்திலும் பூஜ்ஜிய வேகத்திலும்கூட பாதுகாப்பாக வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் போர் விமானங்களை நவீனமயமாக்குவதற்கும் வெளிநாட்டு விமானங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் தேஜாஸ் திட்டம் முக்கியமானது. மேலும், இந்திய விமானப்படை, வேகமாக குறைந்து வரும் தனது படைப்பிரிவின் பலத்தை நிரப்ப தேஜாஸ் போர் விமானத்தையே நம்பி உள்ளது.

IAF Tejas Jet Crashes

தேஜஸ் விபத்துக்குள்ளாவது இரண்டாவது முறை

அந்த வகையில், 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய விமானப் படை தனது முதல் தேஜாஸ் விமானத்தை இணைத்துக் கொண்டது. இந்திய விமானப்படை தற்போது தேஜாஸ் போர் விமானத்தின் Mk1 வகையை தயாரித்து வருகிறது. தவிர, Mk-1A-ஐ விமானப் படையில் சேர்க்கவும் IAF தயாராகி வருகிறது. ஒவ்வொரு வகையும், 16 முதல் 18 விமானங்களை உள்ளடக்கியது. இந்த நிலையில்தான் துபாய் விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் சிக்கிய போர் விமானம் இந்திய கடற்படையைச் சேர்ந்த LCAஇன் முதல் வகையாகும். தேஜாஸ் விபத்துக்குள்ளாவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு கடந்த ஆண்டு மார்ச் 12ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்சால்மர் அருகே நிகழ்ந்தது. அப்போது நடைபெற்ற விபத்தில் நூலிழையில் விமானி உயிர் பிழைத்தார். இதற்கிடையே, கடந்த செப்டம்பர் மாதம் HAL உடன் கூடுதலாக 97 தேஜஸ் போர் விமானங்கள் தயாரிக்க பெரிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் நடவடிக்கைகள் 2027இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஒப்பந்தத்தின்கீழ் 83 தேஜாஸ் Mk-1A விமானங்களை வாங்குவதற்கு அரசாங்கம் முன்னதாக உறுதியளித்திருந்தது. இருப்பினும், அந்த விநியோகங்கள் தாமதமாகிவிட்டன.