climate change  Reuters
உலகம்

$92 பில்லியன்.. காலநிலை பேரழிவிலும் லாபம் பார்க்கும் பணக்காரர்கள்!!

காலநிலை மாற்றத்தால் இயற்கை பேரழிவுகள் அதிகரிக்க, பணக்காரர்கள் இரட்டை லாபம் ஈட்டுகின்றனர்.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் கடுமையான இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு வரும் நிலையில், உலகப் பணக்காரர்கள் இதன் மூலமும் பெரும் லாபத்தைச் சம்பாதிக்கின்றனர் என்று Oxfam International அமைப்பு வெளியிட்டுள்ளது. 'டிசாஸ்டர் டிவைட்' (Disaster Divide) என்ற புதிய ஆய்வறிக்கையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

climate change

உலக மக்கள் தொகையில் வெறும் 0.1 சதவீதமாக இருக்கும் மிக மிக உயரிய பணக்காரர்கள் (சுமார் 80 லட்சம் மக்கள்), உலகின் ஏழ்மையான 44 சதவீத (3.5 பில்லியன்) மக்களின் ஒட்டுமொத்த கார்பன் உமிழ்வை விட அதிக அளவிலான மாசினைப் பூமியில் ஏற்படுத்துகின்றனர்.

இந்த அதிகப்படியான கார்பன் உமிழ்வால் உலகம் முழுவதும் கடும் வெப்ப அலைகள், வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி போன்ற இயற்கை சீற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், ஏழை மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்களது வாழ்வாதாரங்களையும் வீடுகளையும் இழந்து தவிக்கின்றனர்.

இந்த அறிக்கையின்படி, பெரும் கோடீஸ்வரர்கள் கார்பன் உமிழ்வை அதிகரிக்கும் எரிபொருள் மற்றும் தொழிற்சாலைகளில் முதலீடு செய்து முதலாவதாக ஒரு பெரிய லாபத்தை ஈட்டுகின்றனர். பின்னர், அதனால் ஏற்படும் புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளுக்குப் பின் மேற்கொள்ளப்படும் 'மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளை' (Disaster Recovery) செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் முதலீடு செய்து, இரண்டாவது முறையாக பெரும் லாபம் பார்க்கின்றனர். இது பணக்காரர்களுக்குக் காலநிலை பேரழிவிலிருந்து ஒரு இரட்டை லாபத்தைப் பெற்றுத் தருகிறது.

climate change

இயற்கை பேரழிவுகளுக்குப் பிந்தைய இந்த மறுசீரமைப்புச் சந்தையானது, வரும் 2029-ஆம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 92 பில்லியன் டாலராக (சுமார் 70 பில்லியனில் இருந்து) உயரும் என இந்த அறிக்கை கணக்கிட்டுள்ளது. இந்த மீட்புப் பணி வர்த்தகக் குறியீட்டில் உள்ள 217 நிறுவனங்களில் பிளாக்ராக் (BlackRock), வான்கார்ட் (Vanguard) போன்ற உலகின் முன்னணி பெரும் சொத்து மேலாண்மை நிறுவனங்கள் அதிக முதலீடுகளைக் கொண்டுள்ளன.

ஒரு வருடப் பணக்காரர்களின் கார்பன் உமிழ்வு காரணமாக ஏற்படும் கடும் வெப்ப அலையால் உலகம் முழுவதும் 19 லட்சம் பேர் கூடுதலாக உயிரிழக்க நேரிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 78% இறப்புகள் ஏழை மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில்தான் நிகழ்கின்றன, ஆனால் இந்த நாடுகளின் கார்பன் உமிழ்வுப் பங்கு வெறும் 8% மட்டுமே.

climate change

இதற்குத் தீர்வாக, அதிகப்படியான மாசுகளை ஏற்படுத்தும் உலகப் பணக்காரர்கள் மீது கடுமையான வரிகளை விதிக்க வேண்டும் என்றும், இந்த அழிவுகளுக்குக் காரணமான உலகப் பணக்காரர்களின் சொத்துக்கள், சொகுசு விமானங்கள் மற்றும் மாசான முதலீடுகள் மீது கூடுதல் வரிகளை (Wealth & Luxury Taxes) விதித்து, அந்தப் பணத்தை நேரடியாக ஏழை மக்களின் மறுசீரமைப்புக்கு வழங்க வேண்டும் என்றும் ஆக்ஸ்பாம் அமைப்பு உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது.