RAF Typhoons reuters
உலகம்

சவுதியை குறிவைக்கும் ஹவுதிகள்.... களமிறங்கிய பிரிட்டன்

ஏமனில் ஹவுதிகளின் தாக்குதலுக்கு எதிராக சவுதிக்கு ராணுவ உதவி வழங்கும் பிரிட்டன்

PT WEB

செய்தியாளர் - M.மீரா

ஏமனில் அரசு ஆதரவு படைகளுக்கும், ஹவுதிகளுக்கும் இடையே பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சிப் படைகள், சவுதி ஆதரவு பெற்ற அரசுப் படைகளுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.  

இதன் ஒரு பகுதியாக ஹவுதி படைகள் ஏடன் நகரத்தைச் சுற்றி வளைத்து, அரசுப் படைகளுக்கு எதிராக தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறார்கள். இந்த தீவிரமான தாக்குதல்களுக்கு இடையே உலக வர்த்தகத்தின் மிக முக்கிய கடல்வழிப் பாதையான பாப் அல்-மந்தேப் (Bab al-Mandeb) ஜலசந்திப் பகுதியை ஏமனின் ஹவுதி (Houthi) கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதனால் சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் எண்ணெய் விநியோகத்தில் பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

bab el mandeb strait

ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சிப் படையினரின் தொடர் தாக்குதல்களைத் தடுக்கும் வகையில், சவுதி அரேபியாவுக்கு பிரிட்டன் தனது போர் விமானங்களை அனுப்பியுள்ளது. ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) அமைப்பின் டைபூன் (Typhoon) ரக போர் விமானங்களும், வானிலேயே மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானங்களும் சவுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவின் கோரிக்கையை ஏற்றே இந்த ராணுவ உதவி வழங்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரிட்டனின் மத்திய கிழக்கு விவகார அமைச்சர் ஸ்டீபன் டௌட்டி கூறுகையில், சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விமானங்கள் எதிரிகளின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இடைமறித்து அழிக்கும் தற்காப்புப் பணிகளில் மட்டுமே ஈடுபடும் என்றும், ஏமனுக்குள் நுழைந்து ஹவுதி படையினர் மீது நேரடித் தாக்குதல் நடத்தாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

RAF Typhoons

கடந்த மாதம் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள விமான நிலையம் மீது ஹவுதி படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், விமானப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை எதிர்கொள்ள, பிரிட்டன் ராணுவ வீரர்களும் சவுதி படையினருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்

இதற்கிடையே, செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய கடல்வழிப் பாதையான பாப் அல் மண்டெப் ஜலசந்தியை ஹவுதிகள் கைப்பற்றியிருப்பது பிரிட்டனுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்வதால் சர்வதேச வர்த்தகம், எரிபொருள் விலை, கப்பல் காப்பீட்டுச் செலவு ஆகியவை பாதிக்கப்படுகின்றன.

இதனால், கடல் வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஹவுதி படையினருக்கு எதிராக சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கவும் பிரிட்டன் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐ.நா. மூலம் ஹவுதி தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.