தைஸ் நகரம் மற்றும் மயூன் தீவை கைப்பற்றும் முயற்சியில் ஹவுதிகள் தீவிரமாக செயல்படுகின்றனர். சவுதி F-15 விமானங்கள் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், ஹவுதிகள் ஏவுகணைகளை பயன்படுத்தி எதிர் தாக்குதல் நடத்தினர். தைஸ் நகரம் தனிமைப்படுத்தப்பட்டதால், பிராந்தியத்தில் மனிதாபிமான நெருக்கடி மேலும் மோசமாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
செய்தியாளர் - M.மீரா
ஏமன் - ஹவுதி இடையே மோதல், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் மத்திய கிழக்கின் முக்கியமான போர்களில் ஒன்றாகும். 2014-இல் ஹவுதிகள் ஏமன் தலைநகர் சனாவை கைப்பற்றியதைத் தொடர்ந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்தது. இதையடுத்து, ஹவுதிகளுக்கு எதிராகவும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசுக்கு ஆதரவாகவும் 2015-இல் சவூதி தலைமையிலான கூட்டணி ராணுவ நடவடிக்கையில் இறங்கியது . 2022-இல் ஐ.நா. ஆதரவுடன் ஏற்பட்ட போர் நிறுத்தத்தால் எந்த அரசியல் தீர்வும் எட்டப்படவில்லை.
2026-இல் நிலைமை மீண்டும் தீவிரமடைந்து ஹவுதிகள்–சவூதி பதற்றம் அதிகரித்தது. ஏமன் போர் தற்போது உள்நாட்டுப் பிரச்னையைத் தாண்டி, முக்கியமான எண்ணெய் வர்த்தக வழியான பாப் அல்-மண்டேப், சவூதி பாதுகாப்பு, செங்கடல் கப்பல் போக்குவரத்து மற்றும் பிராந்திய அரசியலுடன் தொடர்புடைய சர்வதேச நெருக்கடியாக மாறியுள்ளது.
ஏமனில் கடந்த சில வாரங்களாக ஹவுதிகள் தீவிரமான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள் . மோதலின் போது பாப் அல்-மண்டேப் நீரிணையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மயூன் தீவை ஹவுதிகள் கைப்பற்றியிருந்தனர். இது செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவை இணைக்கும் கடல்வழியைக் கண்காணிக்கும் முக்கியமான இடமாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து ஹவுதிகள் ஏமனின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான தைஸ் (Taiz) நகரத்தைச் சுற்றியுள்ள மலைப்பாதைகளையும் முக்கிய சாலைகளையும் துண்டித்துள்ளனர். குறிப்பாக, தைஸ் நகரை அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஏடன் (Aden) நகரத்தோடு இணைக்கும் முக்கியப் பாதையை ஹவுதிகள் கைப்பற்றியதால் தைஸ் நகரம் தற்போது வெளி உலகத்துடனான தொடர்பை இழந்து முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
தைஸ் நகரை ஹவுதிகள் தங்களது பிடியை மேலும் இறுக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஏமனில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் மோதல் காரணமாக, அந்நாட்டின் பல பகுதிகளில் மனிதாபிமான நிலைமை மோசமாக உள்ளது.
இந்த முற்றுகையை உடைக்க ஏமன் அரசுப் படைகளும் சவுதி கூட்டணியும் தீவிரமாக முயன்று வருகின்றன. ஆனால் சவுதி ஆதரவு படைகளை ஹவுதிகள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தைஸ் (Taiz) நகரப் பகுதியில் ஹவுதிகள் அரசுப் படைகளை முற்றுகையிட்ட போது, அவர்களைப் பின்வாங்கச் செய்யவும், தரைப்படை வீரர்களைப் பாதுகாப்பாக மீட்கவும் சவுதியின் F-15 போர் விமானங்கள் அவசரமாகக் வான்வெளியில் பாய்ந்து (Scramble) தீவிரக் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த ஜெட் விமானங்கள் மீட்பு மற்றும் தற்காப்புப் பணியில் ஈடுபட்ட போது, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்களின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை (Surface-to-Air Missiles) சவுதியின் F-15 ஜெட் விமானங்களை நோக்கிச் செலுத்தி அவற்றை விரட்டியடித்ததாகவும் ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.
மயூன் தீவு மற்றும் கடற்கரை நகரமான மொக்கா (Mocha) ஆகிய பகுதிகள் இந்த தைஸ் மாகாணத்தின் அருகாமையில் அமைந்துள்ளது. எனவே, தரைவழியாக தைஸ் நகரையும், கடல்வழியாக மயூன் தீவையும் ஹவுதிகள் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்துவது ஒட்டுமொத்த தென்மேற்கு ஏமனையும் தங்கள் கைக்குள் கொண்டுவரும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று அல்ஜசீரா செய்தி அறிக்கை கூறுகிறது.
தைஸ் நகரம் என்பது தரைவழிப் போரின் மையப்புள்ளி; மயூன் தீவு என்பது கடல்வழிப் போரின் மையப்புள்ளி. இந்த இரண்டையும் தன் வசம் வைத்திருப்பதன் மூலமே ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி கூட்டணிக்கும், உலக நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுத்து வருகின்றனர்.
தைஸ் மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் நடந்த கடுமையான மோதல்களில் 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் (அரசுப் படையினர் 34 பேர், ஹவுதிகள் 39 பேர்) உயிரிழந்துள்ளனர்.