Houthis Reuters
உலகம்

ஹவுதிகளின் அடுத்த அதிரடி! பின்னணியில் சீனா? சவுதி, இஸ்ரேலுக்கு நெருக்கடி!

ஈரானின் ஆதரவுடன் ஹவுதிகள் ஏவுகணை உதிரிபாகங்களை ஏமனில் தயாரிக்க முயற்சி.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

ஹவுதிகள் , சீனாவில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களைக் கொண்டு அதிநவீன ஏவுகணைகளைத் தயாரிக்க முயற்சி செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் அவர்களின் திறன் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

'கான்ஃப்ளிக்ட் ஆர்மமென்ட் ரிசர்ச்' (Conflict Armament Research - CAR) என்ற ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

houthis - file photo

ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹவுதிகள் ஏமனில் தங்களது ஆயுதத் தயாரிப்புத் திறனை அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக வெளிநாடுகளில் இருந்து அதிநவீன ஏவுகணைகளுக்குத் தேவையான உதிரிபாகங்களைப் பெற முயற்சி செய்துவருவதாக தகவல் வெளியாகியிருந்தது. .

இந்நிலையில், ஏமன் அதிகாரிகள் இரண்டு சரக்குக் கப்பல்களில் சந்தேகத்திற்குரிய ஏவுகணை உதிரிபாகங்களைக் கைப்பற்றியுள்ளனர். இந்த உதிரிபாகங்கள் சீனாவில் இருந்து வந்ததாகவும், ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் ஹொடைடா (Hodeidah) துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட இருந்ததாகவும் அசோசியேட்டட் பிரஸ் (AP) இன் செய்தி அறிக்கை கூறுகிறது.

Hodeidah Port

இந்த உதிரிபாகங்கள் மூலம் ஹவுதிகள் அதிக திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்க வாய்ப்புள்ளது என்று அக்டோபர் 14ஆம் தேதி வெளியான CAR அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

குறிப்பாக, ஈரானின் கெய்பர் ஷேகன் (Kheibar Shekan) ஏவுகணையைப் போன்ற ஓர் ஆயுதத்தை உருவாக்குவதற்கான முயற்சியாக இது இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த ஈரானிய ஏவுகணை சுமார் 2,000 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.

கைப்பற்றப்பட்ட சரக்குகளில் ஏவுகணை தயாரிப்புக்குப் பயன்படக்கூடிய பல முக்கிய உதிரிபாகங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவற்றில் ஏவுகணையின் திசையைக் கட்டுப்படுத்த உதவும் இறக்கைப் பகுதிகள், ராக்கெட் மோட்டாருக்கான மூடிகள், அதன் முனையில் பொருத்தப்படும் முனைகள் மற்றும் மோட்டாரை இயக்க உதவும் கருவிகள் ஆகியவை அடங்கும்.

மேலும், ஏவுகணை வளிமண்டலத்தின் வழியாகப் பயணிக்கும்போது ஏற்படும் அதிக வெப்பத்தில் இருந்து அதைப் பாதுகாக்க உதவும் வெப்பத் தடுப்புப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படும் 'பீனாலிக் ரெசின்' (Phenolic Resin) என்ற மூலப்பொருளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Ballistic missile

இந்த உதிரிபாகங்கள் சாதாரணப் பயன்பாட்டுக்கான பொருட்கள் அல்ல என்றும், குறிப்பிட்ட தொழில்நுட்ப அறிவும் வடிவமைப்புத் தகவல்களும் இருந்தால்தான் அவற்றைக் கொண்டு ஏவுகணைகளை உருவாக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட முழுமையான ஏவுகணைகளை மட்டுமே நம்பியிருக்காமல், அவற்றுக்கான உதிரிபாகங்களைப் பயன்படுத்தி ஏமனிலேயே ஆயுதங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இந்த பாகங்களை சீனாவிடமிருந்து வாங்கியிருக்கலாம் என்று CAR அமைப்பின் மூத்த ஆய்வாளர் ஃபேபியன் ஹின்ஸ் கூறியுள்ளார்.

Houthis

ஹவுதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் உதிரிபாகங்களை வழங்குவதில் ஈரான் முக்கியப் பங்கு வகித்து வந்தது. அதனால் கடந்த சில ஆண்டுகளாக ஹவுதிகளின் ஆயுதத் திறன் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஏமன் ராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட பழைய ஆயுதங்களைப் பயன்படுத்தி வந்த அவர்கள், தற்போது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் நீண்ட தொலைவு பறந்து தாக்கும் ட்ரோன்கள் போன்ற ஆயுதங்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.