ஏமன் தலைநகரில் நேற்று சவுதி நடத்திய வான்வெளித் தாக்குதலில், சிறுமிகள் பெண்கள் உட்பட பொதுமக்கள் 33 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக சவுதி அரேபியா மீது ஒரே நாளில் 6 இடங்களில் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுதிக் கிளர்ச்சிப் படை தற்போது தெரிவித்திருப்பது போர் தீவிரத்தை மேலும் அதிகரித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
2014-ம் ஆண்டு ஏமனின் முன்னாள் அதிபர் அப்த்ரப்பூ மன்சூர் ஹாதி (Abdrabbuh Mansur Hadi) அரசை அதிகாரத்தில் இருந்து அகற்றியதுடன் அந்நாட்டின் தலைநகரான சனாவை (Sanaa) ஹவுதி கிளர்ச்சிக் குழு கைப்பற்றியது. அன்றிலிருந்து, சவுதி ஆதரவு பெற்ற ஏமன் அரசுக்கும் ஈரான் ஆதரவு ஹவுதி படைக்கு இடையே உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது. எனினும், 2022-ஆம் ஆண்டு இரு தரப்புக்கும் இடையே அமலுக்கு வந்த போர் நிறுத்தத்திற்குப் பிறகு, பெரிய அளவிலான தாக்குதல்கள் நடைபெறாமல் இருந்து வந்தன. இந்தச்சூழலில் தான், கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் அமெரிக்கா இடையே தொடங்கிய போரின் காரணமாக மத்தியக் கிழக்கில் ஏற்பட்ட பதற்றம், ஏமனில் மீண்டும் உள்நாட்டுப் போரை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தப் போரின் ஒருபகுதியாக, சர்வதேச கடல்வழிப் பாதையான செங்கடல் பகுதியை ஹவுதி கைப்பற்றியிருக்கும் நிலையில், அதனை மீட்கும் முயற்சியில் ஏமன் அரசுப் படைகளுடன் இணைந்து சவுதி அரேபியா ஹவுதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
அந்தவகையில்,கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சவுதி அரேபியா ஏமனில் 105 வான்வழித் தாக்குதலை நடத்தியதாகவும், இந்தத் தாக்குதலில் பெண்கள் சிறுமிகள் உள்ளிட்ட 33 பேர் கொல்லப்பட்டதாகவும், 39 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி குற்றஞ்சாட்டியிருக்கிறது.
இந்நிலையில் தான், இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாலிஸ்டிக் ஏவுகணைகள், க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் சவுதி அரேபியா மீது ஒரே நாளில் 6 இடங்களில் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஹவுதி அமைப்பின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சரீ (Yahya Saree) தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம், அந்நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோவின் எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதாகவும், இதுமட்டுமின்றி, சவுதியின் நஜ்ரான் பகுதியில் உள்ள தேசிய பாதுகாப்புப் படை முகாம் மற்றும் ஏமனில் சவுதி ஆதரவு படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஹவுதி தெரிவித்துள்ளது.
எனினும், இந்தத் தாக்குதல்களில் ஏராளமானோர் உயிரிழந்ததாகவும் காயமடைந்ததாகவும் ஹவுதிகள் கூறினாலும், இதுவரை உயிரிழப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. அதேபோல், தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் சவுதி அரேபியா இதுவரை உறுதிப்படுத்தவில்லை.