செய்தியாளர் - M.மீரா
ஏமன் உள்நாட்டுப் போரில், ஹவுதி படைகளுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சவூதி தலைநகர் ரியாத்தில் உள்ள Aramco எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு அந்தப் பகுதியில் பெரிய அளவில் தீப்பற்றி, ரியாத் நகரம் முழுவதும் புகை தெரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைதளங்களில் தீப்பற்றி எரியும் Aramco நிறுவனத்தின் படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. NASA செயற்கைக்கோள் படங்களிலும் அந்தப் பகுதியில் பெரிய அளவில் தீ மற்றும் புகை தெரிந்ததாக செய்திகள் கூறுகின்றன.
Aramco என்பது சவூதி அரேபியாவின் மிக முக்கியமான எண்ணெய் நிறுவனமாகும். இதன் எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோக கட்டமைப்புகள் ஏற்கெனவே ஹவுதிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. ஹவுதிகளின் தாக்குதல்கள் சவூதி அரேபியாவின் எண்ணெய் விநியோகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 10ஆம் தேதி ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் சவூதியின் முக்கிய எண்ணெய் வழித்தடமான East-West எண்ணெய்க் குழாய் பாதை செயல்படாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு பின்பு வர்த்தகத் தரவுகளின்படி, செப்டம்பர் 11ஆம் தேதிக்குப் பிறகு யான்புவில் இருந்து சவூதி கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில், சவூதி அரேபியாவின் எண்ணெய் ஏற்றுமதி தினசரி சராசரியாக சுமார் 19.5 லட்சம் பேரல்கள் என்ற அளவில் இருந்ததாக வர்த்தகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால், சவூதியின் எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் எந்தவொரு பெரிய தடையும் சர்வதேச சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை அதிகரித்துள்ளது. சவூதியிலிருந்து எண்ணெய் வரத்து குறைந்ததால், ஐரோப்பிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களும் மாற்று வழிகளைத் தேடி வருகின்றன.
மேலும் போலந்தைச் சேர்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான Orlen, மாற்று கச்சா எண்ணெய்யைப் பெறுவதற்காகச் சந்தையில் பல ஒப்பந்தங்களைத் தேடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 11ஆம் தேதிக்குப் பிறகு மட்டும் மாற்று எண்ணெய் வாங்குவதற்காக அந்த நிறுவனம் குறைந்தது 8 டெண்டர்களை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஹவுதி தாக்குதல்கள் சவூதி - ஏமன் எல்லையைத் தாண்டி ஐரோப்பிய எண்ணெய் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையே, ஹவுதிகளுக்கு எதிராக பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கையை நடத்த சவூதி அரேபியாவும் ஏமன் அரசுப் படைகளும் தயாராகி வருவதாக Axios உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை சில நாட்களுக்குள் தொடங்கலாம் என்றும், ஏமனின் செங்கடல் கடற்கரையில் ஹவுதிகள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பகுதிகளை குறிவைக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பாக, உலகின் முக்கியமான கடல் வழித்தடமான Bab al-Mandab நீரிணையை கண்காணிக்கக்கூடிய பகுதிகளில் இருந்து ஹவுதிகளை பின்வாங்கச் செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஹவுதி அமைப்பின் படை பலம் கடந்த ஆண்டில் சுமார் 3.5 லட்சம் பேர் என மதிப்பிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு அந்த எண்ணிக்கை சுமார் 1 லட்சமாக இருந்தது.