வீரர்களைக் குவிக்கும் அமெரிக்கா.. எதிர்க்கத் தயாராகும் ஈரான்.. தயார் நிலையில் ‘Killer Drone’!
ஈரான் தனது புதிய FPV ட்ரோன் படைகளை உருவாக்கி, மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவத்தின் அதிகரிக்கும் இருப்புக்கு எதிராக தயாராகி வருகிறது. இரு நாடுகளின் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நேரடி மோதல் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
செய்தியாளர் - M. மீரா
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் 7 மாதங்களை கடந்தும் நடந்து வருகிறது. இதற்கிடையே ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தின்போது, கத்தார் மூலம் அமெரிக்காவிடம் ஈரான் சமாதான முன்மொழிவை வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த முன்மொழிவை ட்ரம்ப் ஏற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் Associated Press வெளியிட்ட செய்தியில், அமெரிக்கா மத்திய கிழக்கில் தனது ராணுவ இருப்பை அதிகரித்து வருகிறது எனவும் சுமார் 9,000 கூடுதல் அமெரிக்க வீரர்கள் மற்றும் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பல் இந்தப் பகுதிக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அக்டோபர் இறுதிக்குள் மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 20,000-ஐத் தாண்டும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் புதிய FPV ட்ரோன் படைப்பிரிவுகளை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. FPV ட்ரோன்கள் என்பது, ட்ரோனில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் அதனை இயக்குபவர் நேரடியாக காட்சிகளைப் பார்த்து இயக்கக்கூடிய ட்ரோன்கள். இத்தகைய ட்ரோன்களை ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் இயக்கும் வகையில் புதிய படைப்பிரிவுகள் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. நவீன போர்களில் ட்ரோன்கள் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், ஈரானின் இந்த புதிய நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.
மேலும் ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அது அமெரிக்காவுக்கே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஈரான் ராணுவ அதிகாரி முகமது ரேசா நக்தி, அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் புதிய ட்ரோன் படை, மத்திய கிழக்கில் அதிகரிக்கும் அமெரிக்க ராணுவ இருப்பு மற்றும் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை ஆகியவை, இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் நேரடி மோதல் ஏற்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

