Houthis Reuters
உலகம்

ஹவுதிகளின் பெரிய வெற்றி.. ஏடன் சுற்றி வளைப்பு.. பதற்றத்தில் சவுதி இளவரசர்!

ஏமனில் ஹவுதி படைகளின் அதிரடி தாக்குதலால் ஏடன் நகரம் ஆபத்தில் சிக்கியுள்ளது.

PT WEB

ஏமனில் ஹவுதி கிளர்ச்சிப் படைகள் ஏடன் நகரத்தைச் சுற்றி வளைத்து, அரசுப் படைகளுக்கு எதிராக தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். சவுதி அரேபியாவின் வான்வழித் தாக்குதல்களும், அரசுப் படைகளின் எதிர்த்தாக்குதல்களும் மோதலை மேலும் தீவிரமாக்கியுள்ளன. ஏடன் நகரம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏமன் அரசின் முக்கிய அரணாக இருப்பதால், இதன் கட்டுப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.

செய்தியாளர் - M.மீரா

ஏமனில் அரசுக்கு ஆதரவான படைகளுக்கும், ஹவுதிகளுக்கும் இடையே பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சிப் படைகள், சவுதி ஆதரவு பெற்ற அரசுப் படைகளுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏமனில் ஒரு பகுதியில் இருக்கும் ஹவுதி அமைப்பினர், அந்நாட்டில் உள்ள பிற பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் தற்போது அதிரடித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றனர்.

Yemen war

ஏமனின் முக்கிய துறைமுக நகரமான ஏடனைச் சுற்றி ஹவுதி படைகள் முன்னேறி வருவதாகக் கூறப்படுவது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. நவம்பர் 13-ஆம் தேதி ஹவுதி படைகள் ஏடன் மாகாணத்தைச் சுற்றிவளைத்ததாக ஈரான் அரசு ஊடகமான பிரஸ் டிவி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ஏடன் மற்றும் லஹ்ஜ் (Lahij) பகுதிகளை இணைக்கும் கடற்கரைப் பாதை வரை ஹவுதி படைகள் முன்னேறியதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள எதிரணிப் படையினரிடம் ஆயுதங்களுடன் சரணடைய வேண்டும் அல்லது ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு வெளியேற வேண்டும் என ஹவுதி படைகள் எச்சரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏமனின் அதிகாரப்பூர்வ தலைநகரான சனா (Sanaa) ஏற்கெனவே ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ஏடன் நகரம்தான் தற்போதைய சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஏமன் அரசின் பிரதான அரணாகச் செயல்பட்டு வருகிறது.

yemen

மேலும், ஏடன் வளைகுடாவுக்கு அருகில் அமைந்துள்ள இந்த நகரம், உலகின் முக்கியக் கடல்வழிப் பாதைகளில் ஒன்றான பாப் அல் மண்டெப் ஜலசந்திக்கும் அருகில் உள்ளது. எனவே, ஏடன் நகரை ஹவுதிகள் கைப்பற்றினால், அது ஏமனின் அரசுப் படைகளுக்குப் பெரும் பின்னடைவாக அமையும்.

ஏடன் நகரை சுற்றி வளைத்ததற்கு பதிலடியாக சவுதி அரேபியா தனது போர் விமானங்கள் மூலம் பலமுறை வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, ராணுவத்துக்கான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் கொண்டு செல்லப்படும் முக்கியப் பகுதியாகக் கருதப்படும் குராஸ் (Kuras) பகுதியில் கடுமையான மோதல்கள் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹவுதி படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்க அரசுப் படைகளும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. நவம்பர் 14-ஆம் தேதி வெளியான அமெரிக்காவின் போர் ஆய்வு நிறுவனமான ISW அறிக்கையின்படி, லஹ்ஜ் பகுதியில் அரசுப் படைகள் எதிர்த்தாக்குதல் நடத்தி இழந்த பகுதிகளில் சிலவற்றை மீண்டும் கைப்பற்றியுள்ளன. அதேநேரத்தில், ஹவுதி படைகள் ஏவுகணைகள் மூலம் ஏடன் மற்றும் லஹ்ஜ் பகுதிகளில் உள்ள ராணுவத் தளவாடங்களைக் குறிவைத்ததாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.