Hormuz reuters
உலகம்

ஹார்முஸில் மீண்டும் பரபரப்பு.. 2 கப்பல்களைக் கைப்பற்றிய ஈரான்.. பின்னணி என்ன?

ஆகஸ்ட் மாதத்திலும் மினாப் கடற்பகுதியில் எரிபொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் 11 கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 9 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

PT WEB

உலகின் முக்கியமான கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட தகவலின்படி, கெஷ்ம் தீவு மற்றும் மினாப் அருகே ஈரானிய கடற்பரப்பில் இரண்டு சிறிய கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த முழு விவரங்களை இங்கு பார்க்கலாம்..

கெஷ்ம் தீவு (Qeshm) மற்றும் மினாப் (Minab) அருகே நடத்தப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளில் 50 பேரை கைது செய்ததுடன், 2 கப்பல்களைப் பறிமுதல் செய்துள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கப்பல்கள் சட்டவிரோதமாக எரிபொருள் மற்றும் பிற பொருட்களைக் கடத்திச் சென்றதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

qeshm island

செப்டம்பர் 28-ஆம் தேதி ஈரானின் அரசு செய்தி நிறுவனமான IRNA இந்த தகவலை வெளியிட்டது. ஹார்மஸ்கான் (Hormozgan) மாகாண எல்லைப் பாதுகாப்புப் படையினர், ஈரானின் கடலோரப் பகுதிகள் மற்றும் பிராந்திய கடற்பரப்பில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஹார்மஸ்கான் (Hormozgan) மாகாண எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்ட தகவலின்படி, கெஷ்ம் மற்றும் மினாப் அருகிலுள்ள கடற்பரப்பில் தனித்தனி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதில், எல்லை விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் 50 பேர் கைது செய்யப்பட்டதாகவும், கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 2 கப்பல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட கப்பல்கள் எந்த நாட்டின் கொடியைக் கொண்டிருந்தன, அவற்றின் உரிமையாளர்கள் யார், அவற்றின் அளவு என்ன போன்ற விவரங்களை ஈரான் வெளியிடவில்லை. அதேபோல், கைது செய்யப்பட்ட 50 பேரும் அந்தக் கப்பல்களின் பணியாளர்களா அல்லது தனித்தனி நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டவர்களா என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை.

Hormozgan

இந்த நடவடிக்கை, ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கடல் போக்குவரத்து ஏற்கெனவே பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில் நடந்துள்ளது. ஈரான் மோதல் காரணமாக இந்த முக்கியமான கடல்வழிப் பாதையில் கப்பல் இயக்கம் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, சமீபத்தில் ஒரு நாளில் வெறும் 2 சரக்கு கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் நீரிணையை கடந்ததாகவும் மோதலுக்கு முன்பு சராசரியாக ஒரு நாளில் சுமார் 125 பெரிய வர்த்தகக் கப்பல்கள் இந்தப் பாதையை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹார்முஸ் வழியாகச் செல்லும் சில கப்பல்கள் மீது ஈரான் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. விதிகளை மீறியதாகக் கூறி, இந்த மாதத் தொடக்கத்தில் மேலும் 11 கப்பல்களைக் கட்டுப்படுத்தப்பட்ட கப்பல்களின் பட்டியலில் ஈரான் சேர்த்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்திருந்தது. இதன்மூலம் அந்தப் பட்டியலில் உள்ள கப்பல்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்ததாகக் கூறப்படுகிறது.

Hormuz

ஈரான் ஏற்கெனவே பலமுறை சட்டவிரோத எரிபொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. செப்டம்பர் தொடக்கத்தில், சுமார் 3.82 லட்சம் லிட்டர் கடத்தல் எரிபொருள் இருந்ததாகக் கூறப்படும் ஒரு கப்பலைப் பறிமுதல் செய்து, 11 வெளிநாட்டுப் பணியாளர்களைக் கைது செய்ததாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்திருந்தன. ஆகஸ்ட் மாதத்திலும் மினாப் கடற்பகுதியில் எரிபொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் 11 கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 9 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.