நிமிஷா பிரியா எக்ஸ் தளம்
உலகம்

கொலை வழக்கில் கேரள நர்சுக்கு நாளை மரண தண்டனை.. ஏமனில் தொடங்கிய பேச்சுவார்த்தை!

கொலை வழக்கில் கேரள நர்சுக்கு நாளை மரண தண்டனை விதிக்கப்பட இருக்கும் நிலையில், அதுதொடர்பாக இன்று உயர்மட்டத் தலைவர்கள் முன்னிலையில் ஏமனில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

Prakash J

கேரளாவைச் சேர்ந்த இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு, ஏமன் அரசு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. நாளை, இந்த தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் நிலையில், இதுதொடர்பாக அவசர மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டு விசாரணைக்கு வந்தது. அப்போது, ”இந்த விவகாரத்தில் வரையறுக்கப்பட்ட எல்லைக்கு மீறி மத்திய அரசு எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது. இழப்பீடாக பணம் அளித்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவது என்பது தனிப்பட்ட பேச்சுவார்த்தையாக உள்ளது. மேலும் அங்கு மிகவும் செல்வாக்குமிக்க சில ஷேக்குகளுடனும் (மதத் தலைவர்கள்) தொடர்பு கொண்டுள்ளது” என அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டு விசாரணையில் உள்ளது.

நிமிஷா பிரியா, SC

இதற்கிடையே நிமிஷா பிரியாவுக்கு நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த மரண தண்டனையை நிறுத்துவதற்கான கடைசி நிமிட முயற்சிகள், செல்வாக்குமிக்க சன்னி முஸ்லிம் தலைவர் காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் உத்தரவின் பேரில், அங்குள்ள ஒரு சூஃபி அறிஞரின் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல அறிஞரும் சூஃபி தலைவருமான ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸின் பிரதிநிதிகளுக்கும், 2017ஆம் ஆண்டு செவிலியர் நிமிஷா பிரியாவால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஏமன் நாட்டவர் தலால் அப்தோ மஹ்தியின் குடும்பத்தினருக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

ஷேக் அபுபக்கர் அகமது என்று அதிகாரப்பூர்வமாக அறியப்படும் மற்றும் இந்தியாவின் ’கிராண்ட் முப்தி’ என்ற பட்டத்தை வைத்திருக்கும் 94 வயதான முஸ்லியார், ஏமனில் உள்ள மத அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இந்த வழக்கில் நம்பிக்கை பிறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏமன், நிமிஷா பிரியா, டெல்லி உயர்நீதிமன்றம்

ஷேக் ஹபீப் உமரின் ஆலோசனையின் பேரில், இறந்த தலாலின் நெருங்கிய உறவினரும், ஹொடைடா மாநில நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், யேமன் ஷுரா கவுன்சிலின் உறுப்பினருமான ஒருவர், இன்றைய பேச்சுவார்த்தையில் பங்கேற்க தலாலின் சொந்த ஊரான தாமருக்கு வந்துள்ளதாக காந்தபுரம் அலுவலகம் தெரிவித்துள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நாளை திட்டமிடப்பட்ட மரணதண்டனையை ஒத்திவைக்க அவசர முயற்சிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய பேச்சுவார்த்தையில், இரத்தப் பணத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பான இறுதி முடிவை எடுப்பதிலும், அதற்காக, அந்தக் குடும்பத்தினரை சமாதானப்படுத்த முயற்சிகள் நடக்கலாம் எனவும், அதற்குப் பிறகு திட்டமிடப்பட்டிருந்த மரணதண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படலாம் எனவும், இந்த கோரிக்கையை ஏமன் நிர்வாகமும் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.