சவீரா பிரகாஷ்
சவீரா பிரகாஷ்  ட்விட்டர்
உலகம்

பாக். தேர்தல்: முதல்முறையாக களத்தில் இந்துப் பெண்.. MBBS படித்து அரசியலில் நுழைந்த சவீரா!

Prakash J

2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற இம்ரான் கான் ஆட்சியில், அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அவரது தலைமையிலான கூட்டணியிலிருந்து முக்கியக் கட்சி ஒன்று விலகியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் இம்ரான் கான் பதவியை இழந்தார்.

இதைத்தொடர்ந்து 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். பின்னர், அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகப் பதவியேற்றார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

அதேநேரத்தில் இம்ரான் கான் பதவி இழப்புக்குப் பிறகு அவர்மீது ஊழல், மோசடி, கொலை, பயங்கரவாதம், தேசத் துரோகம் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் 120-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இது தொடர்பான வழக்கு ஒன்றில் அவர்மீது விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் இம்ரான் கான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், அவர் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடையும் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிக்க: ஒடிசா: கிரிக்கெட் விளையாடிய எம்.எல்.ஏ... தடுமாறி விழுந்ததில் நேர்ந்த சோகம்!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய 3 நாட்கள் எஞ்சியிருந்த நிலையில், அதற்கு முன்பாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது உலகளவில் பேசுபொருளானது. நாடாளுமன்றம் பதவிக்காலம் முடியும் முன்னரே, அதனைக் கலைத்தால் 90 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்திக் கொள்ளலாம். கூடுதலாக, 30 நாட்கள் கிடைக்கும் என்பதாலேயே பிரதமர் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க பரிந்துரைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதிகளை மறு வரையறை செய்யவேண்டிய பணிகள் இருந்ததால் தேர்தல் இன்னும் பல மாதங்கள் தாமதம் ஆகலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என அதிகாரபூர்வமக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானின் தற்காலிகப் பிரதமராக அன்வாருல் ஹக் கக்கர் நியமிக்கப்பட்டார்.

இதையும் படிக்க: டெல்லி: கடன் பாக்கி ரூ.1500-ஐ திருப்பிக்கேட்ட இளைஞருக்கு கத்திக்குத்து

இந்த தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக, கைபர் பக்டுங்க்வா மாகாணத்தின் புனேர் மாவட்டத்தைச் சேர்ந்த சவீரா பிரகாஷ் என்பவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். இவர், இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், முதல்முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தனது தந்தையைப் பின்பற்றி அரசியலில் நுழைய முடிவுசெய்துள்ள சவீரா பிரகாஷ், ’தேர்தலில் வெற்றி பெற்றால் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக பணியாற்றுவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பாகிஸ்தானின் அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற சவீரா பிரகாஷ், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் புனேர் மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.