வங்கதேசம் எக்ஸ் தளம்
உலகம்

வங்கதேசம்: இந்து மதத் தலைவர் கைது... வெடிக்கும் வன்முறை.. கோயில் மீது தாக்குதல்.. நடப்பது என்ன?

வங்கதேசத்தில் இந்துமதத் தலைவர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ளது.

Prakash J

அண்டை நாடான வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது முதல் தற்போதுவரை, இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நிகழ்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதில் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், சொத்துகள், உடைமைகள் சேதமாக்கப்படுகின்றன. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என முகமது யூனுஷ் தலைமையிலான அந்நாட்டின் இடைக்கால அரசு உறுதியளித்தபோதும் எந்த மாற்றமும் நிகழவில்லை.

மாறாக, தாக்குதலுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய இந்து மத அமைப்பினர் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. வங்கதேசத்தின் 170 மில்லியன் மக்களில் சுமார் 8 சதவீதம் இந்துக்கள் உள்ளனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேற்றப்பட்டதில் இருந்து, முகமது யூனுஸ் தலைமையிலான புதிய இராணுவ ஆதரவு இடைக்கால அரசாங்கம் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்காக விமர்சனங்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சிறுபான்மையினருக்கு ஆதரவாக இந்து சமூகத்தினர் நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக, சம்மிலிதா சனாதானி ஜோட் என்ற இந்து அமைப்பின் தலைவரான ஸ்ரீசின்மோய் கிருஷ்ண தாஸ் வங்கதேச அரசால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.

அதேநேரத்தில், இந்து மதத் தலைவர் கைது தொடர்பாகவும் இதற்கு நீதி கேட்டும் வங்கதேசத்தில் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளது. இதுதொடர்பாக நடைபெற்ற வன்முறையில், சைபுல் (35) என்ற உதவி அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், சட்டோகிராமில் உள்ள இந்துக் கோயிலை மர்மக் கும்பல் தாக்கியுள்ளனது. இது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: “உங்கள் அதிகாரத்தை யாரும் பறிக்க முடியாது” - ஆதரவாளர்களுக்கு நம்பிக்கை உரையாற்றிய கமலா ஹாரிஸ்!

இதுகுறித்து கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கத்தின் (ISKCON) செய்தித் தொடர்பாளர் ராதாரம் தாஸ், அந்த தாக்குதலுக்குள்ளான வீடியோவை பகிர்ந்து, “வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது 24x7 தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இது எப்போது நிறுத்தப்படும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய பதிவில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது அமைச்சரவை வேட்பாளர் துளசி கபார்ட் ஆகியோரையும் டேக் செய்துள்ளார். முன்னதாக, வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் தாக்குதலை ட்ரம்ப் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்தியாவின் கண்டன அறிக்கைக்குப் பதிலளித்துள்ள வங்கதேச அரசு, “இது, உள்நாட்டு விவகாரம். இந்தியாவின் கவலை தெரிவிப்பது ஆதாரமற்றது. இது, நட்பின் உணர்விற்கு முரணானது. வங்கதேச மக்கள், தங்களது மதச் சடங்குகளைப் பின்பற்றவும், செயல்படுத்தவும், தடையின்றி கருத்துகளை வெளியிடவும் உரிமை உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: சீனா உட்பட 3 நாடுகளுக்கு செக்.. பதவியேற்றவுடன் முதல் கையெழுத்து இதுதானா? அதிரடியில் இறங்கிய ட்ரம்ப்!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இஸ்கான் (ISKCON) அல்லது கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கத்தை, ’மத அடிப்படைவாத குழு’ என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் இந்தக் கருத்தைப் பதிவு செய்துள்ளது. மேலும், மாணவர் தலைமையிலான வன்முறைக்குப் பிறகு தற்போதைய இடைக்கால அரசாங்கம், இஸ்கானை ஆய்வு செய்து வருகிறது எனத் தெரிவித்துள்ளது.

ISKCON

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்கள் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, தன் பதவியை ராஜினாமா செய்த அவர், இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதற்குப் பிறகு வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.

இதையும் படிக்க: “குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை” - அதானிக்கு ஆதரவாக களமிறங்கிய வழக்கறிஞர்கள்.. ராகுலுக்கு எதிராய் பாஜக