Sheikh Hasina REUTERS
உலகம்

இந்தியாவில் இருந்து நடந்தே வங்கதேசம் செல்லும் ஹசீனா? எல்லையில் 50 லட்சம் பேர்!

வங்கதேசத்தில் ஹசீனாவை வரவேற்க 50 லட்சம் ஆதரவாளர்கள் திட்டம்.

PT WEB

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் இருந்து மீண்டும் வங்கதேசம் திரும்பத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தனது தாய்நாட்டுக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் இந்திய எல்லையிலிருந்து நடந்தே வங்கதேசத்துக்குள் செல்லத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் வங்கதேச அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இடைக்கால அரசு அமைந்தது. பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பின்.என்.பி. கூட்டணி அமோக வெற்றிபெற்று அரியணையைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.

Tariq Rahman

அதேநேரத்தில், வன்முறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவரை நாடு கடத்துமாறு வங்கதேச அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா 2 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், வங்கதேசம் நான் திரும்பினால் கொல்லப்படலாம். ஆனாலும், நான் நாடு திரும்புவேன் எனத் தெரிவித்திருந்தார். இந்தச்சூழலில் மீண்டும் ஷேக் ஹசீனா வரும் வங்கதேசத்தின் வெற்றி தினமான டிசம்பர் 16-ம் தேதி மீண்டும் வங்கதேசம் திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார்

sheikh hasina

டெல்லியில் இருந்து டாக்காவுக்கு வணிக விமானம் ஏற்பாடு செய்து தருமாறு ஹசீனா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இந்தக் கோரிக்கையை வங்கதேச அரசு நிராகரித்தது. இந்தியாவிடம் இருந்து அவரை நாடு கடத்தி அழைத்து வந்து, நீதிமன்றத் தீர்ப்பின்படி சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளச் செய்ய வேண்டும் என்று வங்கதேச அரசு வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, ஹசீனாவின் உதவியாளர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், விமானம் மூலம் திரும்ப முடியாவிட்டால், அவர் எல்லையைக் கடந்து நடந்தே வரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், ஹசீனாவை வரவேற்க சுமார் 50 லட்சம் ஆதரவாளர்களைத் திரட்டி, இந்திய எல்லையிலிருந்து டாக்கா வரை மனிதச் சங்கிலி அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள பெட்ராபோல் எல்லைப் பகுதி உள்ளிட்ட குறைந்தது ஒன்பது இடங்களை ஹசீனாவின் ஆதரவாளர்கள் ஆய்வு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் அவாமி லீக் கட்சியினர் ஆதரவாளர்களைத் திரட்டி வருகின்றனர்.