hamas secret tunnel
hamas secret tunnel file image
உலகம்

ஹமாஸின் சுரங்கத்தில் என்ன இருக்கிறது? இஸ்ரேல் ராணுவத்துக்கு என்ன சிக்கல்?

யுவபுருஷ்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான உயிர்பலிகள் ஏற்பட்டுள்ளன. ஹமாஸை அழித்தொழிப்போம் என்று கங்கனம் கட்டிக்கொண்டு காஸாவை தாக்கி வருகிறது இஸ்ரேல். இதனால், காஸா பகுதியே இரண்டாக பிளக்கப்பட்டுள்ளது.

ஹமாஸின் பல முக்கிய தளபதிகளை நாங்கள் கொன்றுவிட்டோம் என்று இஸ்ரேல் கூறிவந்தாலும், ஹமாஸின் ரகசிய சுரங்கத்தை தொட முடியாமல் திணறிவருகிறது இஸ்ரேல்.

ஹமாஸுக்கு பதுங்கு குழிகளாக இருக்கும் இந்த சுரங்கத்தில் என்ன இருக்கிறது. இஸ்ரேல் ராணுவத்திற்கு இருக்கும் சவால்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

காஸா நிலப்பரப்பில் பூமிக்கு அடியில் சுமார் 1,700 சுரங்கங்களை ஹமாஸ் அமைப்பினர் உருவாக்கியுள்ளதாக தெரிகிறது. சுமார் 80 மீட்டர் வர ஆழம் கொண்ட இந்த சுரங்கங்கள், 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கின்றன. சுரங்கங்களின் தொடர்ச்சி 30 மீட்டர் ஆழத்திலிருந்து தொடங்குவதாக நம்பப்படுகிறது. எல்லை கடந்து நீண்டுள்ள இந்த சுரங்கத்தை இஸ்ரேல் ராணுவம் நெருங்க முடியாதபடி, இஸ்ரேல் எல்லையில், பூமிக்கடியில் 20 மீட்டர் உயரத்துக்கு தடுப்பரணையும் ஹமாஸ் படைக்குழுவினர் அமைத்துள்ளனர். சுரங்கத்தின் மேற்பரப்பை வலுப்படுத்த காங்கிரட் சுற்றுச்சுவரும் அமைத்துள்ளனர்.

ஆயுதக்கிடங்கு, ஆலோசனை அறைகள், பிணையக்கைதிகளை வைத்திருக்கும் அறைகள் போன்ற தனித்தனி அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுரங்கத்தின் வாயில்கள், குடியிருப்புகள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதே குற்றச்சாட்டைதான் இஸ்ரேல் ராணுவமும் முன்வைக்கிறது.

நிலத்தடி சுரங்க போர் முறை பற்றி பேசும் வல்லுநர் டாஃப்னே ரீஷ்மண்ட், “சுரங்கங்கள் பண்டைய காலம் முதலே போர்களில் பயன்படுத்தப்படுகின்றன. இருந்தாலும் இவற்றை முழுவதுமாக அழிக்க வழி இல்லை. சில பகுதிகளில் மக்கள் வெளியேற மாட்டார்கள். சில சுரங்கங்களோ எங்கிருக்கின்றன என்பதே தெரியாது. இதனையும் மீறி சுரங்கங்களை அழிக்க முற்பட்டால் பெரிய விளைவுகளை அது ஏற்படுத்தும்” என்கிறார். இந்த விஷயம் தான் இஸ்ரேல் ராணுவத்துக்கும் பெரிய சவாலாக இருந்து வருகிறது.