இஸ்ரேல் - காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தைப் பரிந்துரைத்தார். இப்பரிந்துரை திட்டத்திற்கு இஸ்ரேலும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஹமாஸுக்கு அவகாசம் அளிக்கப்பட்டு, பின்னர் அவர்களும் ஏற்றுக் கொண்ட நிலையில் இருதரப்பிலும் கையெழுத்து ஒப்பந்தமாகி, போர் நிறுத்தமும் அமலானது. இந்த நிலையில், முதல்கட்டமாக இரு தரப்பினருக்கும் இடையே கைதிகள் பரிமாற்றம் இன்று தொடங்கியது. காஸாவில் ஹமாஸ் பிடியில் இருந்த இஸ்ரேல் பிணைக்கைதிகளில் 20 பேர் மட்டுமே உயிரோடு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் இருந்து சுமார் 1,966 பாலஸ்தீனர்கள் கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் போர் நிறுத்தத்தின் முதற்கட்ட நிலையின் ஒப்பந்தமாகும்.
அதன்படி, போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து இன்று காலை முதற்கட்டமாக இஸ்ரேலிய பிணைக்கைதிகளான கிப்புட்ஸ் கஃபர் அசாவிலிருந்து கடத்தப்பட்ட இரட்டையர்களான காலி மற்றும் ஷிவ் பெர்மன், இவர்களைத் தவிர ஓம்ரி மீரான், இஸ்ரேலிய சிப்பாய் மதன் ஆங்ரெஸ்ட், நோவா இசை விழாவிலிருந்து கடத்தப்பட்ட ஈடன் மோர், அலோன் ஓஹெல் மற்றும் கை கில்போ-டலால் ஆகிய 7 பிணைக்கைதிகளும் ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரையும் ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர். இதை கேட்டு அவர்களது உறவினர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இஸ்ரேல் தலைநகர் டெல்–அவிவ் உள்ளிட்ட நகரங்களில் பெரிய திரையில் பிணைக்கைதிகள் ரிலீஸ் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அவர்கள் கையில் கொடியுடன் உற்சாகத்தை வெளிபடுத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து 2வது கட்டமாக உயிரோடு எஞ்சியிருந்த 13 பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். இரண்டாவது பட்டியலில், பார் குபெர்ஷ்டீன், எவ்யதார் டேவிட், யோசெப்-செய்ம் ஓஹானா, செகேவ் கல்ஃபோன், அவினாடன் ஓர், எல்கானா போஹ்போட், மாக்சிம் ஹெர்கின், நிம்ரோட் கோஹன், டேவிட் குனியோ, மேடன் ஆங்ரெஸ்ட், ஈடன் மோர், ரோம் பிராஸ்லாப்ஸ்கி மற்றும் ஏரியல் கோனியோ ஆகியோர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அவர்களுக்கு உடற்தகுதி சோதனை மேற்கொண்டபின்னர், தங்கள் சொந்த நாட்டுக்கு சென்று குடும்பத்துடன் இணைய இருக்கிறார்கள்.
பிணைக்கைதிகளுக்கு ஈடாக பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க இருக்கிறது. பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இறந்த 28 இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகளை இஸ்ரேலுக்கு கொண்டுவருவது மற்றும் பாலஸ்தீனிய கைதிகளை காசாவிற்கு கொண்டுசெல்வது ஆகிய இரண்டையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மேற்பார்வையிடுகிறது.
போர் நிறுத்த நடவடிக்கைகள் தொடங்கி இருப்பது இரு நாட்டு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காஸாவில் உயிருக்கு பயந்து முகாம்களில் தங்கி இருந்த பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்துக்கு திரும்பத் தொடங்கி இருக்கிறார்கள். இதற்கிடையே அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் மற்றும் போருக்குப் பிந்தைய திட்டங்கள் குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்ற தலைவர்களுடன் டெல் அவிவ் வந்துள்ளார். அப்போது, இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் இந்நிகழ்வை வரவேற்று இருக்கிறார். இது "அமைதியை நோக்கிய ஒரு முக்கியமான மைல்கல். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த முன்னேற்றத்தை சாத்தியமாக்கி இருக்கிறார்" என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போர் முடிந்துவிட்டது எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், போர் நிறுத்தம் நீடிக்கும் என்று நினைக்கிறேன். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளாக நீடித்து வருவதால் மக்கள் சோர்வடைந்துவிட்டனர்" என்றார்.
மேலும், "எல்லோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், யூதராக இருந்தாலும் சரி அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி.. ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். இது முன்னதாக நடந்ததில்லை. சாதாரணமாக ஒரு தரப்பு மக்கள் கொண்டாடும்போது மற்றொரு தரப்பு மக்கள் அதை கொண்டாடுவதில்லை. இப்போது அனைவரும் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். நாம் ஒரு அற்புதமான நேரத்தை அனுபவிக்கப் போகிறோம், இது உலகம் இதற்கு முன்பு கண்டதில்லை" எனத் தெரிவிக்கிறார்.