இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. பணயக் கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ஆம் கட்டம் அமல்படுத்தப்படவில்லை. எஞ்சிய பணயக் கைதிகளை உடனடியாக ஒப்படைக்கும்படி இஸ்ரேலும், காஸாவில் இருந்து வெளியேறும்படி ஹமாஸும் வலியுறுத்தியதால் 2ஆம் கட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்தது.
இதையடுத்து, காஸா முனை மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. அதேவேளை, காஸாவில் இருந்து இஸ்ரேல் மீதும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, காஸாவில் வசிக்கும் மக்களில் ஒரு பகுதியினர் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக திரும்பி உள்ளனர். வடக்கு காஸாவின் பல்வேறு பகுதிகளில், “காஸாவை விட்டு ஹமாஸ் அமைப்பினர் வெளியேற வேண்டும்” என வலுவான கோரிக்கையை வைத்துப் மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தங்களுக்கு எழுந்துள்ள எதிர்ப்பை ஒடுக்க ஹமாஸ் தீவிரமான அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு பொதுவெளியில் வைத்து சாட்டையடி கொடுக்கப்பட்டதாகவும், 6 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் போரட்டம் நடத்தியவர்களில் பலர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட ஆறு பேரில் நாசர் ல் ராபியாஸ் என்ற 22 வயது இளைஞரும் ஒருவர். இவர் காஸாவின் டெல் அவிவ் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர். கொல்லப்பட்ட பின்னர் அவரது உடலை அவரின் வீட்டின் வெளியே ஹமாஸ் விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து இதழான டெலிகிராப்க்கு ராமல்லாவை சேர்ந்த மூத்த காவல்த்துறை அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியின்படி, "ஹமாஸ் மக்களை கொடூரமான முறையில் ஒடுக்குகின்றனர். கழுத்தில் கயிறு கட்டப்பட்ட நாய்க்குட்டியைப்போல, அவர்கள் அவரை அவரது வீட்டு வாசலுக்கு இழுத்துச் சென்று, ’ஹமாஸைப் எதிர்ப்பவர்களுக்கு இதுதான் தண்டனை’ என்று அவரது குடும்பத்தினரிடம் கூறினர்" என்று தெரிவித்துள்ளார்.
அதுபோல், "எதிர்ப்பு தெரிவிக்கத் துணிந்த 22 வயது பாலஸ்தீனியர்" எனக் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இஸ்ரேலிய செய்தி நிறுவனம் ஒன்று, ”அவர் கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச் செல்லப்பட்டு, மக்கள் முன்னிலையில் தடிகளாலும், உலோகக் கம்பிகளாலும் தாக்கப்பட்டார்” என்று காஸாவைச் சேர்ந்த ஒருவர் கூறியதாக தெரிவித்துள்ளது. 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளிலும் ஹமாஸை எதிர்த்து காஸாவில் கிளர்ச்சிகள் நடந்தன. ஆனால் அவற்றை ஹமாஸ் கடுமையான அடக்குமுறையால் கட்டுப்படுத்தியாக நம்பப்படுகிறது.