ஹமாஸ் அமைப்பு, வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. கத்தாரின் அழுத்தம் காரணமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை குறைக்கவும், பிராந்திய உறவுகளை பாதுகாக்கவும் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் கூட்டுத் தாக்குதலால் ஈரானை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்துவந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தனது பதிலடி தாக்குதல்களை நடத்திவருகிறது. குறிப்பாக, ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஈரான், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், வளைகுடா நாடுகளில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது.
அதேவேளையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் ஈரானைக் குறிவைத்து தொடர்ந்து தாக்குதலை நடத்திவருகின்றன. இந்தத் தாக்குதல் இன்றுடன் 15-வது நாளை எட்டியிருக்கும் இந்த நிலையில் தான், ஈரான் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஹமாஸ் எனப்படும் பாலஸ்தீனிய இஸ்லாமிய அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் தனது அண்டை நாடுகள் மீது நடத்தி வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டும். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கவும், பிராந்திய நாடுகளுக்கு இடையிலான உறவைப் பாதுகாக்கவும் இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. அதே வேளையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக்கொள்ளவும், பதிலடி கொடுக்கவும் ஈரானுக்கு முழு உரிமை உண்டு என்பதையும் ஹமாஸ் உறுதிப்படுத்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பிற்கு கத்தார் நிதியுதவி செய்து வரும் நிலையில், கத்தாரின் அழுத்தம் காரணமாகவே ஹமாஸிலிருந்து இந்த அறிக்கை வெளிவந்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டதிற்கு ‘இது கொடுமையான குற்றம்” என விமர்சித்திருந்ததுடன், பாலஸ்தீன் - இஸ்ரேல் போரின் போது ஈரான் தேவையான ராணுவ உதவிகளை ஹாமாஸ் அமைப்பிற்கு வழங்கியதாகவும் தெரிவித்திருந்தது. இந்த சூழலில் தான் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஹமாஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.