2025ஆம் நிதியாண்டில் இந்திய நிறுவனங்களின் H-1B விசா விண்ணப்பங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 37% குறைந்துள்ளன.
அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக, குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே தற்காலிகமாக அனுமதிக்கப்படும் H1B விசா விண்ணப்பக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான பல புதிய விதிகளும் அறிவிக்கப்பட்டன. இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என ட்ரம்ப் நிர்வாகம் நம்புகிறது. இந்த புதிய விதியால், இந்தியர்கள் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2025ஆம் நிதியாண்டில் இந்திய நிறுவனங்களின் H-1B விசா விண்ணப்பங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 37% குறைந்துள்ளன. 1990இல் உருவாக்கப்பட்ட இந்த விசா மூலம் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக 3 ஆண்டுகள் பணியாற்ற முடியும். H1B விசாக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது என்பதால், கணினி குலுக்கல் முறையில் விசாக்கள் வழங்கப்படுகிறது. இன்னொருபுறம், பெரும்பாலான H1B விசா வைத்திருப்பவர்கள், அமெரிக்காவிற்கு வந்தவுடன், கிரீன் கார்டு வரிசையில் நுழைந்து நீண்டகாலம் தங்குவதற்கு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். H1B விசா திட்டத்தால் இந்தியர்களே அதிகம் பயன்பெறுகின்றனர்.
அந்த வகையில், அதைப் பெறுவதில் Amazon மற்றும் அதன் கிளவுட்-கம்ப்யூட்டிங் பிரிவான AWS,டாடா கன்சல்டன்சி, மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில், H1B விசாவின் புதிய விதிகளால், இவ்விசாவைப் பெற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், மெட்டா, மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஆகியவை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருப்பதாகவும், 2025 நிதியாண்டில் புதிய வேலைவாய்ப்புகளுக்காக இந்திய நிறுவனங்கள் H-1B விசாக்களைப் பயன்படுத்துவது குறைந்துள்ளதாகவும் அமெரிக்க அரசாங்கத்தின் சமீபத்திய தரவுகளை மேற்கோள் காட்டி ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட விண்ணப்பங்களில் 37% வீழ்ச்சியைக் குறிக்கிறது எனவும் அது தெரிவித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் முன்னணி ஏழு நிறுவனங்களின் விண்ணப்பங்களில் 70% வீழ்ச்சியால் இந்த செங்குத்தான சரிவு குறிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், 2025 நிதியாண்டில், அமேசான் நிறுவனம் 4,644 ஆரம்ப வேலைவாய்ப்புக்கான H-1B விண்ணப்பங்களுடன் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் (1,555), மைக்ரோசாப்ட் (1,394) மற்றும் கூகுள் (1,050) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய H-1B விண்ணப்பங்களை அங்கீகரிப்பதில் நான்கு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் நான்கு இடங்களைப் பிடித்தது இதுவே முதல் முறை என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.
இந்திய நிறுவனங்களில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஆரம்ப வேலைவாய்ப்புக்காக ஒட்டுமொத்தமாக ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் LTIMindtree (20வது) மற்றும் HCL அமெரிக்கா (21வது) போன்ற நிறுவனங்கள் முதல் 25 இடங்களுக்குள் அரிதாகவே இடம் பிடித்துள்ளன. கடந்த ஆண்டு டாடா நிறுவனம் H-1B விசாக்களைப் பெற்றதில் 2வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. H1B விசா திட்டத்தால் இந்தியர்களே அதிகம் பயன்பெற்று வந்த நிலையில், இது, தற்போது அவர்களுக்கு பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அமெரிக்காவிற்கு வெளியே வேலை செய்யும் திறன் ஆகியவை புதிய H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான தேவையைக் குறைத்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
2025 நிதியாண்டில், புதிய நிறுவனங்களுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்காக 68,000க்கும் மேற்பட்ட H-1B விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதில் H-1B விசா அங்கீகாரங்களில் கலிபோர்னியா மற்றும் நியூயார்க் ஆகிய மாகாணங்கள் முன்னிலை வகிக்கிறது. நடப்பாண்டில் ஆரம்ப வேலைவாய்ப்புக்கான அங்கீகரிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் கலிபோர்னியா 21,559 ஒப்புதல்களுடன் முன்னிலையில் உள்ளது. அதைத் தொடர்ந்து டெக்சாஸ் (12,613), நியூயார்க் (11,436), நியூ ஜெர்சி (7,729) மற்றும் வர்ஜீனியா (7,579) ஆகியவை உள்ளன. நகர அளவில், நியூயார்க் அதிக எண்ணிக்கையிலான புதிய H-1B அனுமதிகளைப் பெற்றுள்ளது. இந்தப் புதிய H-1b விசா விண்ணப்பங்களின் மிகப்பெரிய பங்கு தொழில்முறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சேவைகள், கல்வி, உற்பத்தி, தகவல், சுகாதாரம் போன்ற துறைகளிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.