அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்கள் குறித்த ஆய்வு ஒன்று இந்தியாவின் செல்வந்தர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களான குஜராத் மற்றும் பஞ்சாபைச் சேர்ந்தவர்களின் வாழ்நிலையில் உள்ள வேறுபாடுகளைவெளிப்படுத்தியுள்ளது. முனைவர் பட்ட ஆய்வு மாணவர் அபி புத்திமான், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் தேவேஷ் குமார் ஆகியோர் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் குடியேறிகளில் குஜராத்திகளும் பஞ்சாபிகளுமே அதிகம். ஏனென்றால் இவர்களிடம்தான் இடைத்தரகர்களுக்கு பணம் செலுத்தி முறையான விசா இன்றி அமெரிக்காவில் நுழைவதற்கான வசதிவாய்ப்புகள் அமைந்துள்ளன.
அதேசமயம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய குஜராத்திகள் சராசரியாக 58000 அமெரிக்க டாலர்களை ஈட்டுகின்றனர். பஞ்சாபிகள் 48000 டாலர்களை ஈட்டுகின்றனர். அமெரிக்காவில் அடைக்கலம் கோரி விண்ணப்பிக்கின்றவர்களில் 63 சதவீதம் பஞ்சாபியர்களுக்கு அடைக்கலம் கிடைத்துவிடுகிறது. குஜராத்தியர்களில் 25 சதவீதத்தினருக்கு மட்டுமே கிடைக்கிறது. அமெரிக்காவில் அரசியல்ரீதியான வன்முறைக்கு ஆளாகக்கூடிய அந்நியர்களுக்கே அடைக்கலம் வழங்கப்படுகிறது. பஞ்சாபியர்கள் காலிஸ்தானி பிரிவினைவாதிகள் மீதான நடவடிக்கைகளுக்கு அஞ்சி அமெரிக்காவில் குடியேறியவர்களாக தங்களை முன்வைத்துக்கொள்கின்றனர். எனவே அவர்களுக்கு ஒப்பீட்டளவில் எளிதாக அடைக்கலம் கிடைத்துவிடுவதாக இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.