அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் வெளியேற்றம் : ஒரு கழுகுப் பார்வை
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை ட்ரம்ப் வெளியேற்றத் தொடங்கி இருக்கிறார்.
முதற்கட்டமாக கடந்த புதன்கிழமை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் 104 இந்தியர்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள குருராம்தாஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் கை விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டது இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்பிரச்சினையால் நாடாளுமன்றத்திலும் அமளி ஏற்பட்டிருக்கிறது. சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அமெரிக்கா வெளியேற்றியது ஏன்? இது முதல் முறையா, இந்தியர்கள் ஏன் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுகின்றனர், ஏன் அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.... விரிவாகப் பார்க்கலாம்.
சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதில் ட்ரம்ப் ஏன் தீவிரம் காட்டுகிறார்?
ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில், சட்டவிரோத குடியேற்றத்தை அமெரிக்காவின் மிக முக்கிய பிரச்சினையாக முன்னிறுத்திப் பேசினார்.
சட்டவிரோத குடியேற்றத்தால் அமெரிக்க மக்களுக்கு வாய்ப்புகள் பறிபோகின்றன என்றும், தான் அதிபரானால், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றுவேன் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.
தேர்தலில் வென்று இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றிருக்கும் நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதில் தீவிரம் காட்டிவருகிறார்.
இந்தியர்கள் வெளியேற்றப்படுவது இது முதன்முறையா?
அமெரிக்க சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது இது முதன்முறை அல்ல. 2009 ஆண்டு முதலாக இத்தகைய வெளியேற்ற நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுவருகிறது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்துள்ள தகவலின்படி, 2009 முதல் 2023 வரை 14,198 இந்தியர்களை அமெரிக்கா திருப்பியனுப்பியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். கடந்த ஆண்டில்கூட, 1,368 பேர் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்டார்கள் என்றும் ஜெய்சங்கர் சொல்லியிருக்கிறார்.
தற்போது திருப்பி அனுப்பப்பட்டவர்களில் குஜராத், பஞ்சாப், ஹரியாணா மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
ஏன் தற்போதைய வெளியேற்றம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது?
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை திருப்பி அனுப்புவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், இம்முறை அதை அமெரிக்க அரசு அரங்கேற்றிய விதம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைத் திருப்பியனுப்ப பயணிகள் விமானங்களைப் பயன்படுத்துவதே வழக்கம். ராணுவ பயன்படுத்தப்படுவது மிகவும் அரிதானது. இந்நிலையில், ட்ரம்ப் இத்தகைய வெளியேற்றப் பணிகளுக்கு ராணுவ விமானத்தைப் பயன்படுத்துவது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
அதுவும், கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் கைவிலங்கிடப்பட்டு, குற்றவாளிகள் போல் நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. வேண்டுமென்றே சட்டவிரோதமாக நுழைந்தவர்களையும், ஏஜெண்ட்டுகளால் ஏமாற்றப்பட்டவர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
கூடவே, குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது அவருக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட்டது. அப்போது பேசிய மோடி, இனி அமெரிக்க மண்ணில் கால் வைக்க மாட்டேன் என்றும், இந்தியாவுக்கு விசா கேட்டு அமெரிக்கர்களை வரிசையில் நிற்க வைப்பேன் என்றும் சூளுரைத்திருந்தார். அவர் பிரதமராக இருக்கும் தருணத்தில், கைவிலங்கிடப்பட்டு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், அமெரிக்காவை கண்டிக்காமல், மத்திய அரசு அமைதி காப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திரும்பப் பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்திருக்கிறது. ஆனால், அவர்கள் விலங்கிடப்பட்டு அழைத்துவரப்படும் முறையை மாற்ற வேண்டும். மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் பேசி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்ற நிலவரம் என்ன?
அமெரிக்காவில் மொத்தமாக 1.1 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் அதிகபட்சமாக மெக்சிசோவைச் சேர்ந்தவர்கள் 40 லட்சம் பேர், எல் சல்வடாரிலிருந்து 7.50 லட்சம் பேர், இந்தியாவிலிருந்து 7.25 லட்சம் பேர் சட்டவிரோதமாக குடியேறியிருப்பதாக ஆய்வுகள் (Pew Research report) தெரிவிக்கின்றன.
இந்தியா தவிர்த்து, கொலம்பியா, குவாட்டமாலா, பெரு, ஹோண்டுராஸ் ஆகிய இடங்களுக்கு அமெரிக்கா தனது ராணுவ விமானம் மூலம் சட்டவிரோத குடியேறிகளையும் திருப்பி அனுப்பியிருக்கிறது அமெரிக்கா.
ஏன் இவ்வளவு ஆபத்துக்கு மத்தியிலும் மக்கள் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறுகின்றனர்?
வேறெந்த நாட்டைவிடவும் அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் சட்டவிரோத குடியேற்றம் நிகழ்கிறது. அமெரிக்காவுக்கு சென்றால் தங்கள் வாழ்வு மேம்படும் என்ற எண்ணத்தில் அமெரிக்காவில் குடியேறுவதை உலக மக்கள் பலரும் தங்கள் வாழ்நாள் கனவாக கொண்டிருக்கின்றனர். ஆனால், அமெரிக்காவில் வேலை விசா கிடைப்பது கடினம். எனவே, சட்டவிரோதமாக குடியேறும் முயற்சியில் இறங்குகின்றனர்.
எப்படி நடக்கிறது சட்டவிரோதக் குடியேற்றம்?
அமெரிக்காவுக்கு இந்தியர்கள் இரண்டு வழிகளில் சட்டவிரோதமாக குடியேறுகின்றனர்.
முதலாவது வழிமுறை. அமெரிக்காவுக்கு சுற்றுலா அல்லது தற்காலிக விசா மூலம் சென்று விட்டு, அப்படியே அங்கேயே தங்கிவிடுவது.
இரண்டாவது வழிமுறை, Dunki Route என்ற அழைக்கப்படும், வேறு நாடுகளின் எல்லைகள் வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழைவது. இவ்வாறு நுழைவது மிகவும் ஆபத்து நிறைந்தது. உயிரிழக்கும் அபாயம் உண்டு. இந்த சட்டவிரோத ஊடுருவலுக்கு உதவும் ஏஜென்சிகளுக்கு பல லட்சம் பணம் கொடுக்க வேண்டும்.
பொதுவாக, மெக்சிகோ, கனடா எல்லை வழியாகவே பெரும்பாலானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர்.
2020 அக்டோபர் - 2024 ஆகஸ்ட் வரையில் மட்டும் அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் 86,400 இந்தியர்களும், அமெரிக்க - கனடா எல்லையில் 88,800 பேர் அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத குடியேறிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
பொதுவாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள், அதிகாரபூர்வமாக எங்கும் வேலை செய்ய முடியாது. ஆவணங்கள் தேவைப்படாத எரிபொருள் நிலையங்கள், உணவகங்கள், சூப்பர் மார்க்கெட், வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், காவல் உள்ளிட்ட வேலைகளிலேயே அவர்கள் ஈடுபட முடியும். தங்கள் பெயரில் சிம் கார்டு வாங்க முடியாது, வங்கிக் கணக்கு தொடங்க முடியாது.
அமெரிக்காவில் அரசு பள்ளிகள் ஆவணங்கள் கேட்பதில்லை. இதனால், அவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதிலும் பெரிய சிக்கல் இருக்காது என்று கூறப்படுகிறது.
என்றாவது ஒரு நாள் அமெரிக்க குடியுரிமை பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் நாள்களைக் கழிக்கின்றனர்.
இவ்வாறு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிபவர்களுக்கு அந்நாட்டிலேயே குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது பிறப்பின் அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமைக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தடைவிதித்துள்ளார்.