அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து வரி விதிப்பையும் அமலுக்கு கொண்டுவந்துள்ளார். மேலும், ”டென்மார்க் நாட்டிடமிருந்து அமெரிக்காவுக்காக கிரீன்லாந்தை விலைக்கு வாங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு கிரீன்லாந்தும் டென்மார்க்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசு நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள மூத்த அதிகாரிகள் குழு விரைவில் கிரீன்லாந்துக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த குழு மார்ச் 27-29 முதல் அங்கு இருக்கும் எனக் கூறப்படுகிறது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் தலைமையில் செல்லும் இந்தக் குழுவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பயணத்தில் கிரீன்லாந்தின் பாரம்பரியத்தையும், அங்குள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களையும் பார்வையிட உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கிரீன்லாந்துக்கு பயணம் செய்வது குறித்து உஷா வான்ஸ், “நமது நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பின் நீண்ட வரலாற்றைக் கொண்டாடுவதற்காக இந்த வருகை இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவருடைய வருகையை கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் கண்டித்துள்ளன. இதுகுறித்து கிரீன்லாந்து பிரதமர் மியூட் எகெட், “அமெரிக்கர்களை நாங்கள் நம்பலாம், அவர்கள் எங்கள் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் இருந்தனர். அவர்களுடன் நாங்கள் மிகவும் நெருக்கமாக பணியாற்றி மகிழ்ந்தோம். ஆனால் அந்தக் காலம் முடிந்துவிட்டது.
எங்கள் மீது அதிகாரத்தை செலுத்துவதே அவர்களது நோக்கம். இது அராஜகம். அந்த நாட்டின் அரசியல் தலைவரின் மனைவி இங்கு என்ன செய்யப் போகிறார். அவர்களை நாங்கள் வரவேற்கப் போவதில்லை. அந்தக் குழுவையும் இடைக்கால அரசாங்கம் சந்திக்காது” எனத் தெரிவித்துள்ளார். அதுபோல், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரெடெரிக்சனும் கண்டித்துள்ளார். ”இந்த விவகாரத்தை தங்கள் தரப்பு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என எச்சரித்துள்ளார்.
அட்லான்டிக் பெருங்கடலுக்கும் ஆர்க்டிக் பெருங்கடலுக்கும் இடையிலுள்ள உலகின் மிகப்பெரிய தீவுதான் கிரீன்லாந்து. இந்தத் தீவின் 80 சதவிகிதப் பரப்பு பனிக்கட்டியால் போர்த்தப்பட்டிருக்கிறது. இப்பகுதி அரிய கனிமங்கள் உள்ளிட்ட அபரிமிதமான இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டின்கீழ், 1979 முதல், ஓரளவு தன்னாட்சி பெற்றதாக இருக்கும் கிரீன்லாந்தில் அமெரிக்காவின் பிடுஃபிக் விண்வெளி தளம் (Pituffik Space Base) உள்ளது. இதன் காரணமாகவே அமெரிக்க ராணுவத்திற்கும் அதன் பாலிஸ்டிக் ஏவுகணை எச்சரிக்கை அமைப்பிற்கும் கிரீன்லாந்து முக்கியமானதாக இருக்கிறது.
மேலும், ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் மிக எளிதாக இணைக்கும் பாலமாக இது இருக்கிறது. மேலும், உலக நாடுகள் தங்களின் வர்த்தக வரம்பை ஆர்க்டிக் வட்டத்தில் விரிவுபடுத்த முயல்கின்றன. குறிப்பாக, ரஷ்யா இந்தப் பகுதியை ஒரு மூலோபாய சந்தர்ப்பமாகப் பார்க்கிறது. இதையடுத்தே, ட்ரம்ப் அதன்மீது பார்வையைச் செலுத்தியுள்ளார். அமெரிக்காவின் கொள்கை என்பதையே உலகம் முழுவதும் நிலைநாட்ட வைக்கும் வகையிலேயே ட்ரம்ப் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.