கிரீன்லாந்து | அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற தடை!
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றிருக்கும் டொனால்டு ட்ரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து வரி விதிப்பையும் அமலுக்கு கொண்டுவந்துள்ளார். மேலும், ”டென்மார்க் நாட்டிடமிருந்து அமெரிக்காவுக்காக கிரீன்லாந்தை விலைக்கு வாங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். கடந்த முறை அவர் அதிபராக இருந்தபோது முயன்று முடியாமல்போன விஷயம்தான் இது. 2019ஆம் ஆண்டு அவர் அதிபராக இருந்தபோது, கிரீன்லாந்தை விலைக்கு வாங்கப் போவதாக அறிவித்த ட்ரம்ப்பின் யோசனையை டென்மார்க் அரசு நிராகரித்துவிட்டதைத் தொடர்ந்து, அவர் டென்மார்க் பயணத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலிதான் கிரீன்லாந்து விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. கிரீன்லாந்தின் பிரதமராக இருக்கும் மியூட் இகடே, ”கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” எனத் தெரிவித்திருந்தார். அதுபோல் டென்மாா்க் பிரதமா் மேட் ஃப்ரெட்ரக்சன், ”கிரீன்லாந்தின் எதிா்காலம் குறித்து அந்தத் தீவின் மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். என்றாலும் ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், தற்போதைய டென்மார்க் மன்னர் ஃபிரடெரிக், நாட்டின் கோட் ஆஃப் ஆர்ம்ஸ் சின்னத்தை மாற்றியமைத்து மறைமுக எச்சரிக்கை விடுத்தார். அதன்படி, புதிய சின்னத்தில் கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளைக் குறிக்கும் ஒரு துருவ கரடி மற்றும் ஆடு குறியீடு இடம்பெற்றது. குறிப்பாக 500 ஆண்டுகளாக இருந்த சின்னம் மாற்றப்பட்டது. இதன்மூலம், அந்தப் பகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான டென்மார்க் முயன்றுள்ளது தெளிவாகியது.
இந்த நிலையில், கிரீன்லாந்தைச் சோ்ந்த அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. கிரீன்லாந்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்திவரும் சூழலில், அத்தகைய முயற்சிக்கு அரசியல் ஆதரவு திரட்டப்படுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள நாடாளுமன்ற ஆவணத்தில், ‘கிரீன்லாந்தில் அரசியல் நோ்மையை நிலைநாட்டுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. பிராந்தியத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பலம் வாய்ந்த நட்பு நாடு விருப்பம் தெரிவிப்பதன் பின்னணியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை உள்நாட்டு அரசியல் நன்கொடைகளையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு கட்சிக்கு தனியார் பங்களிப்புகள் மொத்தம் 200,000 டேனிஷ் குரோனர் (€17,170)ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. அதேநேரத்தில் தனிநபர்கள் 20,000 குரோனர் (€1,717) க்கு மேல் கொடுக்க முடியாது எனக் கட்டுப்படுத்துகிறது.
அட்லான்டிக் பெருங்கடலுக்கும் ஆர்க்டிக் பெருங்கடலுக்கும் இடையிலுள்ள உலகின் மிகப்பெரிய தீவுதான் கிரீன்லாந்து. இந்தத் தீவின் 80 சதவிகிதப் பரப்பு பனிக்கட்டியால் போர்த்தப்பட்டிருக்கிறது. இப்பகுதி அரிய கனிமங்கள் உள்ளிட்ட அபரிமிதமான இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டின்கீழ், 1979 முதல், ஓரளவு தன்னாட்சி பெற்றதாக இருக்கும் கிரீன்லாந்தில் அமெரிக்காவின் பிடுஃபிக் விண்வெளி தளம் (Pituffik Space Base) உள்ளது. இதன் காரணமாகவே அமெரிக்க ராணுவத்திற்கும் அதன் பாலிஸ்டிக் ஏவுகணை எச்சரிக்கை அமைப்பிற்கும் கிரீன்லாந்து முக்கியமானதாக இருக்கிறது. மேலும், ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் மிக எளிதாக இணைக்கும் பாலமாக இது இருக்கிறது.