India-UK Vision 2035 pt web
உலகம்

திராட்சைகளுக்கான 8% வரி நீக்கம்.. இந்தியா இங்கிலாந்து ஒப்பந்தத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

இந்தியா - பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் (FTA), இந்திய திராட்சை ஏற்றுமதியாளர்களும் விவசாயிகளும் பெரிதும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

PT WEB

கடந்த ஜூலை 24 அன்று இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே தடையற்ற வர்த்தகத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது . எதிர்காலத்தை மையமாகக் கொண்ட இந்த ஒப்பந்தத்திற்கு ‘India-UK Vision 2035’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தம் தற்போது இருதரப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் 56 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை 2030க்குள் இரு மடங்கும் மேலாக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் 99% பொருட்களுக்கு சுங்கவரி விலக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தொழிலாளர்கள் அடிப்படையிலான துறைகளுக்கு ஆதரவாக இருப்பதும், மேக் இன் இந்தியா முயற்சியை முன்னேற்றுவது தொடர்பான திட்டங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில்தான், இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரிட்டன் சந்தையில் இந்திய திராட்சைக்கு விதிக்கப்பட்டு வந்த 8 விழுக்காடு வரி நீக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் திராட்சைத் தலைநகரம் என அழைக்கப்படும் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் கூட்டுறவு முறையில் 14,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் திராட்சை விவசாயம் செய்து வருகின்றனர். ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதால், பெரிய அளவிலான உற்பத்தியை மேற்கொள்ளவும், சந்தையில் சிறந்த விலையைப் பெறவும் முடிவதாக நாசிக் திராட்சை விவசாயிகள் கூறுகிறார்கள்.