உலகின் மிகப்பெரிய நிறுவனங்களால் ஒன்றாக கூகிள் திகழ்ந்து வருகிறது. இந்த கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் (Alphabet) ஆண்டறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நிறுவனத்தின் நிகர லாபம் (Net Profit) கடந்த ஆண்டை விட 25% குறைந்து 26.2 பில்லியன் அமெரிக்க டாலராக சரிந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதோடு செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்புக்காக ஆல்ஃபாபெட் நிறுவனம் செய்யும் மூலதனச் செலவு 2026-ஆம் ஆண்டில் 195 பில்லியன் முதல் 205 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என்றும், 2027-லும் இது மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, கூகுளின் முக்கிய வருவாய் ஆதாரமான விளம்பர வருவாய் (Advertising Revenue) எதிர்பார்த்த வளர்ச்சியைத் தொட முடியாமல் சற்று குறைந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மேலும், நிறுவனத்தின் லாபம் வருடாந்திர அளவில் 25 சதவீதம் குறைந்து 26.17 பில்லியன் டாலர் என சரிந்தது. கடந்த ஆண்டு இதே செப்டம்பர் காலாண்டில் வருவாய் 34.98 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் இந்த சரிவு எதிர்பார்க்கப்பட்டது என்றாலும், இந்த அளவு சரிந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நேற்று பங்குச்சந்தை தொடங்கியதும் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்யத் தொடங்கினர்.
இதனால் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 12% முதல் 13% வரை வீழ்ச்சியடைந்தன. இதன் மூலம் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு ஒரே நாளில் இந்திய மதிப்பில் 40 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் சரிந்தது. இது பங்கு சந்தை வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் என்விடியா (Nvidia) நிறுவனம் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அன்று ஒரே நாளில் 589 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் மதிப்பை இழந்ததே வரலாற்றில் மிகப்பெரிய சரிவாகும். அதன் பின்னர் நேற்று ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் பங்குகள் 500 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் மதிப்பை இழந்துள்ளது. ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் பங்குகள் இந்த அளவு சரிந்துள்ளது அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.