GOLD REUTERS
உலகம்

கோலமாவுக்குப் பதில் GOLD! தரையில் தகதகத்த தங்கம்! வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!

பண்டிகைக் காலங்களிலும், விசேஷ நாட்களிலும் வீடுகளின் வாசலில் வண்ணப் பொடிகள், அரிசி மாவு மற்றும் பூக்களைக் கொண்டு கோலமிடுவதைப் பார்த்திருப்போம். ஆனால், துபாயில் தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொண்டு பிரம்மாண்டமான ரங்கோலி உருவாக்கப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார். ர

இந்தியாவின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, துபாயில் உள்ள பிரபலமான City Centre Deira வணிக வளாகத்தில் தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான ரங்கோலி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. Damas என்ற நகை நிறுவனமும், Dubai Festivals and Retail Establishment அமைப்பும் இணைந்து இந்த வித்தியாசமான ரங்கோலியை உருவாக்கியுள்ளன. இதனை இந்திய நடிகை தமன்னா திறந்து வைத்துள்ளார்.

gold

இந்த ரங்கோலியை உருவாக்குவதற்காக மொத்தம் 213 தங்க நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த எடை சுமார் 6.5 கிலோ ஆகும். மேலும், 380 கேரட்டுகளுக்கும் அதிகமான வைரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. பாரம்பரியமாக ரங்கோலிகளில் பயன்படுத்தப்படும் வண்ணப் பொடிகள் மற்றும் பூக்களுக்குப் பதிலாக, விலை உயர்ந்த நெக்லஸ்கள், வளையல்கள், காதணிகள், பதக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நகைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 2 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ரங்கோலி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நகைக் கோலத்தை உருவாக்குவதற்காக 10 கைவினைக் கலைஞர்கள் கொண்ட குழு தொடர்ந்து 16 மணி நேரம் பணியாற்றியுள்ளது.

gold

தங்கம் மற்றும் வைரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வித்தியாசமான ரங்கோலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்தப் படைப்பின் அழகையும், கைவினைக் கலைஞர்களின் கடின உழைப்பையும் பாராட்டி வருகின்றனர். பாரம்பரியமான தீபாவளிக் கொண்டாட்டத்தை ஆடம்பரமான கலைப்படைப்பாக மாற்றியுள்ள துபாயின் இந்த முயற்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.