காசாவில் இடம்பெயரும் மக்கள் pt web
உலகம்

காசா | வெளியேறச் சொல்லும் இஸ்ரேல்.. தவிக்கும் காசா மக்கள்.. தொடர் அழுகுரலில் மேற்கு கரை..

ஹமாஸை அழிப்பதாகக் கூறி காசாவை முழுமையாக நிர்மூலமாக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது இஸ்ரேல். காஸா நகரைத் தரைமட்டமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அங்குள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.

PT digital Desk

சிலருக்கு கை இல்லை... சிலருக்கு கால் இல்லை... சிலரின் முகமே சிதைந்திருக்கிறது... உணவு இல்லை. தண்ணீர் இல்லை. மருந்து இல்லை... கண்முன்னே குழந்தை பசியில் துடிக்கிறது... ஒரு தகப்பன் தன் மகளுக்கு கடைசி கவளம் உணவை ஊட்டிவிட்டு கண்ணீருடன் தன் பசியை மறக்கிறான். ஒரு தாய் தனது குழந்தையை இடுபாடுகளுக்குள் தேடி ஓடிக்கொண்டிருக்கிறாள்.  வயதான பெற்றோர் உணவின்றி மூலையில் சுருண்டு படுத்து கிடக்கின்றனர்... எங்கு திரும்பினாலும் அழுகுரல்... அழிமானங்கள்... நூற்றாண்டு கண்டிராத பேரரழிவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது காஸாவில்.

ஹமாஸை அழிப்பதாகக் கூறி காசாவை முழுமையாக நிர்மூலமாக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது இஸ்ரேல். அதன் ராணுவம் காசா நகரின் குடியிருப்புப் பகுதிகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்திவருகிறது. நகரைத் தரைமட்டமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அங்குள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது. படுக்கைகள் மற்றும் உடமைகளை மூட்டை கட்டிக்கொண்டு, எதிர்காலம் குறித்த எந்த நம்பிக்கையுமின்றி மக்கள் நிராதரவாகப் புலம்பெயர்கின்றனர்.

ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR), காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் – குறிப்பாக வீடுகள் மற்றும் பள்ளிகளை குறிவைத்து நடத்தும் வான் தாக்குதல்கள் – மக்களிடம் “நடுக்கத்தை உண்டாக்குகிறது” என்றும், பெருமளவிலான மக்களை இடம்பெயரச் செய்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

காசா அரசின் ஊடக அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “9 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா நகரத்தில் உறுதியாக இருக்கின்றனர். வலுக்கட்டாய இடம்பெயர்வையும் வெளியேற்றத்தையும் உறுதியாக நிராகரிக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளது.

தப்பிச் செல்லும் மக்களை, “பாதுகாப்பு மண்டலம்” என்று அறிவிக்கப்பட்டிருக்கும் அல்-மவாசி பகுதிக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இப்பகுதி இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. 2023இல் போர் தொடங்கியதில் இருந்து அல்-மவாசி மீது 100-க்கும் மேற்பட்டமுறை தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதில்,மொத்தம் 2,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் இப்பகுதிக்கு இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களை தங்கவைப்பதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் போதிய அளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதும்கூட மக்கள் தெற்கு பகுதிக்கு செல்ல கட்டாயப்படுத்தப்படுகின்றனர். ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் (OCHA), இந்த வாரம் ஒரு நாளில் மட்டும் 20,000 பேருக்கு மேல் காசா நகரை விட்டு தெற்குப் பகுதிகளுக்கு தப்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியிலிருந்து இதுவரை காசா நகரின் 3.2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

காசாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆபத்தில் உள்ளனர். அத்தியாவசிய சேவைகள் குறைந்து கொண்டிருப்பதால், பாதுகாப்பற்ற பிரசவங்கள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தாய்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த அவசர நிதி தேவைப்படுவதாக ஐ.நா மகப்பேறு நிதியம் (UNFPA) வலியுறுத்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இனப்படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரையில் 65,000 மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  இந்த எண்ணிக்கை வெறும் புள்ளிவிவரம் அல்ல. ஒவ்வொரு எண்ணிக்கையும் ஒரு வாழ்க்கை. ஒரு குடும்பம். ஒரு கனவு.