"அவமானகரமானது" - மெய்யழகனுக்கு வந்த எதிர்மறை விமர்சனம்; பிரேம்குமார் பகிர்ந்த அதிருப்தி| Meiyazhagan
`96', `மெய்யழகன்' படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பிரேம்குமார். மெய்யழகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடையவுள்ளதை முன்னிட்டு சில பேட்டிகளை அளித்து வருகிறார் பிரேம். அப்படி அவர் அளித்த பேட்டி ஒன்றில் விமர்சனங்கள்தான் தன்னுடைய `மெய்யழகன்' திரையரங்கில் பெரிய வரவேற்பு பெறாமல் போனதற்கு காரணம் எனப் பேசி உள்ளார். இந்தக் கருத்து இப்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
அந்த பேட்டியில் பிரேம்குமார் "ஒரு படத்திற்கு ஓடிடியில் வரவேற்பு கிடைக்கிறது, ஆனால் தியேட்டரில் அந்த வரவேற்புக்கு ஏதோ ஒரு தடை வருகிறது. ஏனென்றால் எல்லா படமும் ஒரே வகையானது கிடையாது. பிரபலமான நடிகர்களின் படங்கள் என்றால் பொதுமக்கள் மட்டும் கிடையாது, சினிமாத்துறையினர் கூட ஆர்வமாக சென்று பார்ப்போம். இயல்பாகவே அவற்றுக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. அதே சமயம் பிரபல நடிகரோ, இயக்குநரோ இல்லாமல் கூட சில படங்கள் வந்து ஓடுவது உண்டு. அவை ஒரு தனித்துவ கதைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
அதுவே இப்போது ஓடிடியில் வரவேற்பு பெரும் படங்கள் திரையரங்கில் ஏன் ஓடவில்லை என்றால், இடையில் இருக்கும் சில விமர்சகர்களே காரணம். எல்லோரும் அப்படி என சொல்ல மாட்டேன். ஆனால் விமர்சனங்கள் பொருத்தவரை என் படத்திற்கு சாதகமானதாக அமையவில்லை. உதாரணத்திற்கு ஒரு விமர்சகர், "இருப்பதிலேயே மிக கஷ்டம் இருவர் தண்ணியடித்துவிட்டு திரையில் பேசுவதை பார்ப்பது" என்றார். இன்னொருவர் "கிளி வளர்ப்பில் எவ்வளவு கஷ்டம் இருக்கிறது தெரியுமா? இவ்வளவு மெத்தனமாக காட்டுகிறீர்கள்?" என தன் விமர்சனத்தில் சொன்னார். இன்னும் உச்சகட்டமாக விமர்சனத்தில் கிசுகிசு பேசுபவர்கள் கூட இருக்கிறார். எனவே விமர்சனம் என்பது இப்படியான நிலையில் இருக்கிறது. வெகு சிலரே சினிமா மீது மிகவும் ஆர்வத்தோடு இருந்து விமர்சனம் செய்கிறார்கள்.
இது பல பேர் சொன்னதுதான், இப்போது நானுமே அதை ஏற்றுக் கொள்கிறேன். ஒருவேளை இந்தப் படத்தை நீங்கள் மலையாளத்தில் எடுத்திருந்தால், இங்கு கொண்டாடி இருப்பார்கள். நீங்கள் இங்கு எடுத்ததுதான் தப்பு எனப் பலரும் கூறினார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. என்னுடைய ஊரில் என்னுடைய மொழியில் எடுத்த ஒரு படத்தை, அங்கு எடுத்தால் இங்கு ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என சொன்னது மிக கஷ்டமாக இருந்தது. படத்தில் மக்கள் ரசித்த காட்சியை, கதைக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என விமர்சனத்தில் சொன்னார்கள். இவர்களுக்கு ஏதாவது குறை சொல்லவேண்டும், மேலும் அவர்களுக்கு மறைமுக நோக்கங்களும் உள்ளது. இப்போது என்னுடைய படத்திற்கு நல்ல பெயரும், ஓடிடியில் ஒரு அங்கீகாரமும் கிடைத்தது. ஆனால் தியேட்டரில் அதற்கு கிடைக்க வேண்டிய வரவேற்பு கிடைத்திருந்தால், அது என்னுடைய அடுத்த படத்தின் உருவாக்கத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தி இருக்கும். உண்மையிலேயே படம் நன்றாக இல்லை என்றால் நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால் இப்போது படத்தை எடுத்து, அதை இவர்களிடமிருந்து காப்பாற்றி எடுத்து வரவேண்டி இருக்கிறது. பைரஸி சினிமாவுக்கு எவ்வளவு ஆபத்தோ, அதைவிட பெரிய ஆபத்தாக தான் இதனை பார்க்கிறேன்.
இதே மெய்யழகனை தெலுங்கு பத்திரிகையாளர்களுக்கு போட்டு காண்பித்த போது, அவர்களாகவே எதுவும் கேட்காமலே படத்தை புகழ்ந்து பேசினார்கள். படம் மோசமாக இருந்தால் அப்படி பேசி இருப்பார்களா? அந்த ரசனையே இல்லாமல் எப்படி விமர்சனம் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. என் படத்திற்கு இப்படி நடந்ததால் பேசுகிறேன் என நினைக்க வேண்டாம். `கொட்டுக்காளி' என்ற ஒரு படம், சர்வதேச அரங்கில் பெயரெடுத்த படம். நாம் அதைக் கொண்டாடி இருக்க வேண்டாமா? அதற்கும் மோசமான விமர்சனங்களே வந்தது. நெகட்டிவாக பேசுவதை வாழ்க்கை முறையாகவே மாற்றிக் கொண்டுவிட்டனர். எனவே அவர்களிடம் பேசுவதால் எந்த பயனும் இல்லை. நாம் நேரடியாக பார்வையாளர்களிடம் பேச வேண்டிய காலம் இது. பல பேர் விமர்சனங்கள் பார்த்து உங்கள் படத்தை நான் தவறவிட்டேன் எனப் பதிவிட்டவர்கள் ஏராளம். இது அவமானகரமானது" என தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு தனுஷ், வடிவேலு போன்றோர் திரை விமர்சனங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள். தற்போது பிரேம்குமார் முன்வைத்துள்ள காட்டமான கருத்து பேசு பொருளாகி உள்ளது.