மகாத்மா காந்தியின் பெயரில் ஈரானில் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்தியா-ஈரான் நட்புறவின் ஆழம் வெளிப்படுகிறது. அயதுல்லா அலி கமேனி இந்தியாவுடன் ஆழமான உறவுகளை வலியுறுத்தியதுடன், அவரது மகனும் இந்தியாவுடன் நல்ல ஒத்துழைப்பை வலியுறுத்தினார். சமீபத்திய தாக்குதல், மேற்கு ஆசியப் பதற்றங்களை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
இந்தியாவிற்கான ஈரானின் உயர்மட்டப் பிரதிநிதி டாக்டர் அப்துல் மஜீத் ஹக்கீம் இலாஹி, இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ஆழமான நட்புறவு குறித்துப் பேசியுள்ளார். ஈரானில் மகாத்மா காந்தியின் பெயரில் சாலைகள் பெயரிடப்பட்டுள்ளன. ஈரானிய மக்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் காந்தியின் கொள்கைகள் மீது மிகுந்த மதிப்புக் கொண்டுள்ளனர். தெஹ்ரானில் உள்ள மிகவும் நவீனமான மற்றும் மேம்படுத்தப்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் ஒன்றுக்கு 'காந்தி மருத்துவமனை' (Gandhi Hospital) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பின் அடையாளமாக விளங்குகிறது.
துரதிர்ஷ்டவசமாக, கடந்த வாரம் இந்த மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் பல குழந்தைகள் உயிரிழந்ததாக அவர் மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்தார். தற்போதைய மேற்கு ஆசியப் பதற்றங்களுக்கு மத்தியில், கட்டமைப்புகள் மற்றும் மருத்துவமனைகள் தாக்கப்படுவது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்தார்..
மேலும், ஈரானின் முன்னாள் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி இந்தியாவுடன் ஆழமான உறவுகளை எவ்வாறு வலியுறுத்தினார் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று நீண்டகால உறவுகளை குறிப்பிட்டார். ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்பு ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வேரூன்றியுள்ளது. ஈரானியர்கள் கலாச்சாரம், நாகரிகம், தத்துவம் மற்றும் ஆன்மீகம் மூலம் இந்தியர்களுடன் இணைந்துள்ளனர். மறைந்த உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி, எழுதிய முதல் புத்தகம் இந்தியாவைப் பற்றியது. அது இரண்டு தொகுதிகளாக உள்ளது. இதன் பொருள் அவர் இந்தியாவை நேசித்தார் என்பதே ஆகும். மேலும் பல முறை அவர் ஈரானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலியுறுத்தி வந்தார்.
இந்தியாவுடனான உறவுகளில் ஈரான் எந்த மோதலையோ அல்லது பிரச்சினைகளையோ விரும்பவில்லை என்றும் கூறினார். அதுமட்டும் இல்லாமல், அவரது மகனும் இந்தியாவுடன் நல்ல ஒத்துழைப்பை வலியுறுத்தினார் என்று அப்துல் மஜீத் ஹக்கீம் இலாஹி குறிப்பிட்டு பேசினார்.
மேலும், மோதலைப் பற்றிப் பேசுகையில், ஈரான் போரை தொடங்கவில்லை. ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தது, மேலும் இராஜதந்திர முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தது. பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தில் இரு பிரதிநிதிகளும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. திடீரென்று, அமெரிக்கா இஸ்ரேலுடன் சேர்ந்து, ஈரானை தாக்கியது. மேலும் அவர்கள் ஈரானில் உள்ள ஏராளமான பொதுமக்களை குறிவைத்தனர். இந்தப் போரில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.