வெடிச்சத்தத்தையும் மீறி உலகை உலுக்கிக்கொண்டிருக்கிறது காஸா குழந்தைகளின் அழுகுரல். ஒரு தாய்க்கு ஒரு துண்டு ரொட்டி கிடைத்தால், அதை குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்து, மீதமுள்ளதை நாளைக்கு சேமிக்கிறார். காசாவில் நிலவும் பசிப்பிணியின் கொடுமை தொடர்பான பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்த்து மனகலங்கியிருப்போம்.
அப்படி ஒரு வீடியோதான் தற்போதும் வைராலாகியிருக்கிறது. போரின் கோர முகத்தை காட்டும் மற்றொரு சான்று இது.
இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் 5 ரூபாய் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட், போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் அசல் விலையை விட 500 மடங்கு அதிகமாக விற்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் இருந்து சமீபத்தில் வெளியான ஒரு வைரல் பதிவு, பார்லே-ஜி பாக்கெட் 24 யூரோக்களுக்கு மேல் (தோராயமாக ரூ.2,342) விற்கப்படுவதாகக் கூறி பெரும் பரபரப்பை உருவாக்கியது.
ஜவாத் என்ற நபர் வெளியிட்ட அந்தப் பதிவில், "நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இன்று ரவீஃப்புக்குப் பிடித்த பிஸ்கட் எனக்குக் கிடைத்தது. விலை 1.5 யூரோக்களிலிருந்து 24 யூரோக்களுக்கு மேல் உயர்ந்தாலும், ரவீஃப்புக்குப் பிடித்த விருந்தை என்னால் மறுக்க முடியவில்லை" என்று அந்த பதில் குறிப்பிடப்பட்டது .
இதனை கண்ட பயனர்கள் பலரும், பார்லே நிறுவனத்தை டேக் செய்து காசா மக்களுக்கு உதவுமாறு கூறி வருகின்றனர்.
மேலும், மற்றொரு பயனர், “ இந்தியா பாலஸ்தீனியர்களுக்கு உதவிக்காக பார்லே ஜி-யை அனுப்பியது, ஆனால் உதவி லாரிகள் ஹமாஸால் கைப்பற்றப்பட்டு, அவர்கள் பசியுள்ள பாலஸ்தீனியர்களுக்கு உணவுகளையும் மருந்துகளையு கொடுப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜவாத், "காசா மக்களுக்கு வரும் உதவிகள் நியாயமாக விநியோகிக்கப்படுவதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், ஆக்கிரமிப்பு செய்யும் சிலர் இந்த உதவியைத் திருடி சந்தையில் அதிக விலைக்கு விற்க பல முகவர்களையும் திருடர்களையும் நியமித்துள்ளனர். உதாரணமாக, மாவு சுமார் $500க்கு விற்கப்படுகிறது, சர்க்கரை ஒரு கிலோவுக்கு சுமார் $90க்கு விற்கப்படுகிறது. அனைத்து அடிப்படைப் பொருட்களும் பைத்தியக்காரத்தனமான விலையில் விற்கப்படுகின்றன. வாங்க முடியாத சிலர், தங்களுக்குத் தேவையானதைப் பெறுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். இதற்கிடையில், மற்றவர்கள் அதிக அளவில் திருடி சந்தையில் பெரும் லாபத்திற்காக விற்கிறார்கள்."
கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையின்படி, காசாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் பிப்ரவரி மாதத்திலிருந்து கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மே மாத இறுதியில் பரிசோதிக்கப்பட்ட 50,000 குழந்தைகளில், 5.8 சதவீதம் பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கபட்டுள்ளனர். இது சில வாரங்களுக்கு முன்பு 4.7 சதவீதமாகயிருந்தது.
கடந்த மாதம் , குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட குறைந்தது 29 பேர் பட்டினியால் இறந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
காசாவின் வடக்கு பகுதியில் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 16% பேர் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. மருத்துவமனைகளில் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் மற்றும் பசிப்பிணியில் சிக்கிய குழந்தைகள் அதிகரித்து வருகின்றன.